

வரும் ஜூன் மாதம் ஜிம்பாப்வேயில் நடைபெறும் 3 ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களுக்கான தோனி தலைமை இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் சில முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை.
அதாவது ஆஸ்திரேலியா தொடர் மற்றும் உலகக் கோப்பை டி20 உட்பட முந்தைய குறைந்த ஓவர் கிரிக்கெட் அணிகளில் ஆடிய சுமார் 17 வீர்ர்கள் தற்போது ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.
அந்த வீரர்கள் வருமாறு:
அஸ்வின், ஷிகர் தவண், குர்கீரத் சிங், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, புவனேஷ் குமார், அஜிங்கிய ரஹானே, இசாந்த் சர்மா, ரோஹித் சர்மா, உமேஷ் யாதவ், மொகமது ஷமி, ஹர்பஜன் சிங், பவன் நெகி, ஆஷிஷ் நெஹ்ரா, ஹர்திக் பாண்டியா, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங்.
ஆனால், ஃபைஸ் ஃபாசல் என்ற விதர்பா பேட்ஸ்மென் அணியில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்பின் தரப்பில் யஜுவேந்திர சாஹல், ஜெயந்த் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் சர்வதேச மட்டத்தில் கே.எல்.ராகுல் இன்னமும் ஆடியதில்லை, எனவே இவரது தேர்வு குறிப்பிடத்தகுந்தது. அதே போல் கருண் நாயர், மந்தீப் சிங் ஆகியோருக்கும் முதல் சர்வதேச வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஃபைஸ் ஃபாஸல் என்ற விதர்பா அணி பேட்ஸ்மென் 30-வயதானவர். லிஸ்ட் ஏ (50 ஓவர்) போட்டிகளில் மொத்தம் இதுவரை ஆடிய 64 ஆட்டங்களில் 2037 ரன்களை 34.52 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். 5 சதம், 13 அரைசதம். ஸ்ட்ரைக் ரேட் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை: 66.65. அதிகபட்ச ஸ்கோர் 129 நாட் அவுட்.
டி 20 கிரிக்கெட்டில் இவர் 48 போட்டிகளில் 896 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 66. ஸ்ட்ரைக் ரேட் 105.41. அரைசதங்கள் 3 எடுத்துள்ளார். ஆனால் இந்த 896 ரன்களில் மொத்தம் 87 பவுண்டரிகள் 14 சிக்சர்களை அடித்துள்ளார்.
இந்த அணியில் குறிப்பிடத்தகுந்த நீக்கம் ஹர்திக் பாண்டியா. அதே போல் ஐபிஎல் கிரிக்கெட்டில் கடுமையான முறையில் சீராக ரன்களைக் குவித்த கவுதம் கம்பீருக்கு வாய்ப்பளிக்கப் படாததும் ரசிகர்களுக்கு ஒருவேளை ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
ஜிம்பாப்வே தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணி:
தோனி (கேப்டன்), ராகுல், ஃபைஸ் ஃபாஸல் (விதர்பா பேட்ஸ்மென்), மணிஷ் பாண்டே, கருண் நாயர், ராயுடு, ரிஷி தவண், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், தவல் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா, பரிந்தர் ஸரண், மந்தீப் சிங், கேதர் ஜாதவ், ஜெயதேவ் உனட்கட், யஜுவேந்திர சாஹல்.