“மசாஜ் செய்யச் சொல்லி வற்புறுத்தினர்” - விளையாட்டு விடுதி ராகிங் கொடுமை குறித்து டுட்டீ சந்த்
விளையாட்டு விடுதியில் தங்கியிருந்த காலத்தில் தானும் ராகிங் சிக்கலை எதிர்கொண்டு உள்ளதாக இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், சீனியர்களின் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இதனை டூட்டி சந்த் தெரிவித்துள்ளார்.
தான் சந்தித்த ராகிங் பிரச்சினை குறித்து ஃபேஸ்புக் பயனரின் பதிவு ஒன்றுக்கு அவர் ரிப்ளை செய்துள்ளார். அதில், "நான் விளையாட்டு விடுதியில் தங்கியிருந்த காலத்தில் சீனியர்கள் என்னை அவர்களுக்கு மசாஜ் செய்யும் படியும், துணிகளை துவைக்கும் படியும் சொல்வார்கள். நான் அதனை எதிர்த்தால் என்னை துன்புறுத்துவார்கள். இது தொடர்ச்சியாக நடந்த காரணத்தால் அது குறித்து விடுதி பொறுப்பாளரிடம் புகார் கொடுப்பேன். அந்த நேரங்களில் நான் திட்டு வாங்கிக் கொண்டது மட்டுமே மிச்சம்.
மன ரீதியாக எனக்கு அது சிக்கலை கொடுத்தது. அந்தக் காலம் மிகவும் கடினமாக இருந்தது. பெரும்பாலானவர்கள் இந்த ராகிங் தொந்தரவு காரணமாக பயிற்சியை விடுத்து, வீடு திரும்பினர். சமயங்களில் குடும்பம் குறித்தும், நிதி ஆதாரம் குறித்தும் கமெண்ட் செய்வார்கள். எனக்கு உதவ யாருமே இல்லாத காலம் அது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
26 வயதான டூட்டி சந்த் எதிர்வரும் காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்காக தடகள (ரிலே) பிரிவில் விளையாடவுள்ளார் . 2006 முதல் 2008 வரை புவனேஷ்வர் விடுதியில் தங்கியிருந்த போது ராகிங் துன்புறுத்தலுக்கு அவர் ஆளாகியுள்ளார்.
