

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 165 ரன்களை சேர்த்துள்ளது. அதிரடியாக ஆடி ஹெட்மேயர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
ஐபிஎல் 15வது சீசனின் 19-வது லீக் ஆட்டத்தின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதில டாஸ் வென்ற லாக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர், தேவ்தட் படிக்கல் இணை துவக்கம் கொடுத்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணையை 5 ஓவர் வீசிய ஆவேஷ்கான் பிரித்தார். அவர் வீசிய பந்து பட்லரைக்கடந்து ஸ்டேம்பை தட்டித்தூக்கியது. 13 ரன்களிலேயே அவர் நடையைக் கட்டினார்.
களத்துக்கு வந்த சஞ்சு சாம்சன், தேவ்தட் படிக்கலுடன் கைகோத்தார். 10 பந்துகளில் 12 ரனகளே எடுத்து சஞ்சு சாம்சனை, ஜேசன் ஹோல்டர் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அடுத்து தேவ்தட் படிக்கலும் 29 ரன்களில் வெளியேற, ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸனும் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றார். இதனால் 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை சேர்த்திருந்தது.
அடுத்து வந்தவர்களும் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், ஹெட்மேயர் 36 பந்துகளில் 59 ரன்களை குவித்து அதிரடி காட்டினார். இதனையடுத்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் 165 ரன்களை சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் கிருஷ்ணப்பா கௌதம், ஜெசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டையும், அவேஷ்கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.