

இலங்கைக்கு எதிரான ஆசியக் கோப்பை டி20 போட்டியில் 18 பந்துகளில் 35 ரன்கள் விளாசிய யுவராஜ் சிங், தனது பழைய பாணி ஆட்டத்துக்கு தான் திரும்புவதாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ.டிவி-க்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
“என்னுடைய பழைய பாணிக்கு நான் திரும்பியதாக நான் நினைக்கும் ஒருநாளாக இது அமைகிறது. நன்றாக ஆடுவதாக நான் என் உணர்வை உருவாக்கிக் கொள்ள கொஞ்சம் ஃப்ரீயாக ஆட வேண்டிய தேவை இருந்தது. என்னுடைய ஆட்டம் எனக்கு திரும்பக் கிடைத்துள்ளதாகவே நான் உணர்கிறேன். நான் மெதுவாக மீண்டும் எனது பாணி பேட்டிங்கில் முழுமை எய்துவேன்.
எந்த பவுலரை இலக்காக்கி அடிப்பது என்பதை நான் தீர்மானித்து வருகிறேன். அப்படித்தான் இடது கை ஸ்பின்னர் (ஹெராத்) வீசும் போது இவரது பந்துகளை தாக்கி ஆட வேண்டும் என்று முடிவெடுத்தேன். இடது கை பேட்ஸ்மென் ஒருவர் சிக்ஸ் அடிப்பவராக இருந்தால், சிக்ஸ் அடிக்க முடிவெடுத்தால் அதற்கு இடது கை ஸ்பின் பவுலிங்தான் சரியான இலக்கு. இந்த இன்னிங்ஸில் எடுத்த எடுப்பிலேயே தன்னம்பிக்கையுடன் அடித்து ஆடுவது என்று முடிவெடுத்தேன்.
கடந்த போட்டியில் (பாகிஸ்தானுக்கு எதிராக) சூழ்நிலைகள் வேறு, அங்கு ஒரு சிலர் ஸ்பெல்லை முடிக்கக் காத்திருக்க வேண்டிய தேவை இருந்தது. மேலும் குறைந்த இலக்கு என்பதாலும் விராட் கோலி நிற்கிறார் என்பதாலும் கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொண்டேன்.
கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளாக விராட் கோலி தனது வாழ்நாளின் சிறந்த ஃபார்மில் உள்ளார். மிகவும் சீராக ஆடுவதோடு, தனது பணி என்ன என்பதை நன்கு அறிந்துள்ளார். மிக அழகாக ஆடுகிறார், தொடர்ந்து இவ்வாறு ஆடுவார் என்று நான் நம்புகிறேன்.
ஒவ்வொரு போட்டியிலும் மேம்பட விரும்புகிறேன், அணிக்காக ஆட்டத்தில் திருப்பு முனை ஏற்படுத்தும் விதமாக ஆடுவதே நோக்கம், இதனை பலமுறை செய்வேன் என்றே நான் நம்புகிறேன்” என்றார் யுவராஜ் சிங்.