Last Updated : 02 Mar, 2016 09:38 AM

 

Published : 02 Mar 2016 09:38 AM
Last Updated : 02 Mar 2016 09:38 AM

தர்மசாலாவில் நடைபெற உள்ள இந்தியா-பாக். போட்டியில் இமாச்சல பிரதேச அரசு அரசியல் செய்யக்கூடாது: பிசிசிஐ செயலாளர் ஆவேசம்

தர்மசாலாவில் நடைபெற உள்ள டி 20 உலகக்கோப்பையின் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை வைத்து இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு, அரசியல் செய்யக் கூடாது என பிசிசிஐ செயலாளர் அணுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

டி 20 உலகக்கோப்பையில் தர்மசாலாவில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ் தான் போட்டிக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என இமாச்சல பிரதேசத்தை ஆளும் காங்கிரஸ் அரசு, மத்திய உள்துறை அமைச் சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

அம்மாநில முதல்வர் வீர்பத்ரா சிங், உள்துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் இத்தகவலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல்வரின் இந்த கடிதத்துக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து உடனடியாக பதில் வெளியானது.

இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளரும், பாஜக மக்களவை உறுப்பினருமான அணுராக் தாகூர் கூறும்போது, இமாச்சல பிரதேச அரசுக்கு போட்டி அட்டவணை குறித்த தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பே தெரியும். அந்த நேரத்தில் எந்தவித கவலையும் தெரிவிக்கவில்லை.

உலகக்கோப்பை ஆட்டங்கள் நடத்தப்படும் இடங்கள் ஒரு வருடத்துக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த இடங்களுக்கு போட்டிகள் ஒதுக்கீடு என்பது 6 மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு விட்டது. போட்டியை கண்டுகளிக்க உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் முன் பதிவு செய்துள்ள நிலையில் கடைசி நேரத்தில் இதுபோன்று மாநில அரசு கூறுவது நல்லது அல்ல.

மாநில காங்கிரஸ் அரசு தெளிவாக அரசியல் விளை யாட்டை கையாள்கிறது. நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் தடகள வீரர்களுக்கு, தெற்காசிய விளையாட்டு போட்டியின் போது அஸாம் அரசு பாதுப்பு வழங்கியது. அதே போன்று இமாச்சல பிரதேச அரசு செய்ய முடியாதது ஏன்?.

நீங்கள் பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறினால், இந்தியாவில் பாக். அணிக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிய பாகிஸ்தான் வாரியத்தின் கூற்றுகள் உண்மையாகிவிடும். இந்த விவகாரம் நாட்டின் நன்மதிப்பை பொறுத்தது. இதில் நீங்கள் அரசியல் செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.

இந்தியா பாகிஸ்தான் இடையி லான ஆட்டத்தை தர்மசாலாவில் இருந்து மாற்ற வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நேற்று முன்தினம் இமாச்சலபிரதேச காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், பாஜக எம்.பி.யு மான அணுராக் தாகூரின் முயற்சி யால் தான் இந்த போட்டி இங்கு நடத்தப்படுகிறது. தீவிரவாத தாக்கு தலால் பலியான ராணுவ வீரர் களின் நினைவிடம் தர்மசாலா மைதா னம் அருகில் தான் உள்ளது. இத னால் பாகிஸ்தான் அணியினர் இங்கு வந்து விளையாடுவது பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் எனவும் இமாச்சல பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுக்விந்தர் தெரிவித்திருந்ததும் நினைவுக்கூறத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x