

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 26 பேர் கொண்ட இந்தியதடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட இந்திய தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. இதில் ஆடவருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்ய ராஜ், நாகநாதன் பாண்டி ஆகியோரும் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் தமிழகத்தின் ரேவதி வீரமணி, சுபா வெங்கடேஷன், தனலட்சுமி சேகர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அணியில் இடம் பெற்றுள்ள 26 பேரில் 16 பேர் தனிநபர் போட்டிகளில் பங்கேற்கின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகள போட்டிகள் 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அணி விவரம் (ஆடவர்)
அவினாஷ் சேபிள் (3000 மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ்), எம்பி ஜபிர் (400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்), எம்.சங்கர் (நீளம் தாண்டுதல்), தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்), நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் (ஈட்டி எறிதல்), கே.டி.இர்பான் சந்தீப் குமார், ராகுல் ரோஹிலா (20 கிலோ மீட்டர் நடை பந்தயம்), குர்பிரீத் சிங் (50 கிலோ மீட்டர் நடை பந்தயம்), 4x400 தொடர் ஓட்டம் அமோஜ் ஜேக்கப், ஆரோக்ய ராஜீவ், முகமது அனாஸ், நாகநாதன் பாண்டி, நோஹ் நிர்மல் டாம், 4x400 கலப்பு தொடர் ஓட்டம் சர்தக் பாம்ப்ரி, அலெக்ஸ் அந்தோணி.
மகளிர்
டூட்டி சந்த் (100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம்), கமல்பிரீத் கவுர், சீமா அண்டில் பூனியா (வட்டு எறிதல்), அணு ராணி (ஈட்டி எறிதல்), பாவ்னா ஜாட், பிரியங்கா கோஸ்வாமி (20 கிலோ மீட்டர் நடை பந்தயம்), 4x400 கலப்பு தொடர் ஓட்டம் ரேவதி வீரமணி, சுபா வெங்கடேஷன், தனலட்சுமி சேகர்.-பிடிஐ