

செகந்திராபாத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் மீண்டும் நுழைய போராடி வரும் யுவராஜ் சிங் அபாரமான இன்னிங்ஸ் ஒன்றை ஆடி பஞ்சாப் அணியை வெற்றிபெறச் செய்தார். இதன் மூலம் பஞ்சாப் காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
செகந்திராபாத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஹர்பஜன் சிங் முதலில் சர்வீசஸ் அணியை பேட் செய்ய அழைத்தார். ஆனால் அந்த அணியின் என்.எச்.வர்மா (113), எஸ்.ஆர்.ஸ்வெய்ன் (101) ஆகியோர் பஞ்சாப் பந்து வீச்சை புரட்டி எடுக்க சர்வீசஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி பரபரப்பான இறுதி கட்டத்தில் 49-வது ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் முதல் 20 ஓவர்களுக்குள் இறங்கிய யுவராஜ் 42-வது ஓவர் வரை அதிரடி ஆட்டம் ஆடி 83 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 98 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக எல்.பி.ஆகி வெளியேறினார். ஆனாலும் அவர் அவுட் ஆகும் போது 9 ஓவர்களில் 54 ரன்கள் தேவை என்ற ஓரளவுக்கு எளிதான விரட்டலை சாத்தியமாக்கி விட்டே சென்றார்.
முதலில் ஆடிய சர்வீசஸ் அணியில் தொடக்க வீரர் ஏ.எச்.குப்தா என்ற பேட்ஸ்மேன், எஸ்.கவுல், பிரைந்தர் சிங் ஆகியோர் பந்து வீச்சை அடித்து நொறுக்கி 29 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசி ஹர்மீத் பந்தில் வெளியேறினார். இவரும் சதமடித்த மற்றொரு தொடக்க வீரருமான விக்கெட் கீப்பர் நகுல் ஹர்பல் வர்மவும் இணைந்து 7 ஓவர்களில் 58 ரன்கள் என்ற அதிரடி தொடக்கம் கொடுத்தனர். ஆனால் பச்சாரா (20), கேப்டன் பாலிவால் (11) யஷ்பால் சிங் (2) ஆகியோர் சடுதியில் ஆட்டமிழக்க சர்வீசஸ் அணி 21வது ஓவரில் 124/4 என்று ஆனது.
அப்போது நகுல் வர்மாவுடன் இணைந்தார் அதிரடி வீரர் சவுமியா ரஞ்சன் ஸ்வெய்ன். இருவரும் 28 ஓவர்களில் 5-வது விக்கெட்டுக்காக 186 ரன்களை விளாசினர், இந்த விளாசலை பஞ்சாப் கேப்டன் ஹர்பஜன் எதிர்பார்க்கவில்லை. 125 பந்துகளைச் சந்தித்த வர்மா 9 பவுண்டரி 1 சிக்சருடன் 113 ரன்களையும், 90 பந்துகளைச் சந்தித்த ஸ்வெயின் 10 பவுண்டரிகளுடன் 101 ரன்களையும் எடுத்தனர். ஸ்கோர் ஸ்வெய்ன் ஆட்டமிழக்கும் போது 310 ரன்களை எட்டியது. கடைசியில் 323 ரன்களை எடுத்தது சர்வீசஸ்.
பஞ்சாப் தரப்பில் ஹர்பஜன் சிங் மட்டுமே சிக்கனமாக வீசி 10 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டியது. தொடக்க வீரர்களான ஜிவஞ்ஜோத் சிங், பர்கத் சிங் ஆகியோர் எஸ்.யாதவ், பதானியா ஆகியோரை புரட்டி எடுத்தனர். எஸ்.யாதவ் 6 ஓவர்களில் 50 ரன்களை விட்டுக் கொடுக்க இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 10.3 ஓவர்களில் 82 ரன்கள் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். ஆனால் இருவருமே பஸ்ஸி என்பவரிடம் ஆட்டமிழந்தனர்.
மந்தீப் சிங், யுவராஜ் சிங் இணைந்து 14 ஓவர்களில் 82 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். மந்தீப் சிங் 56 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 45 எடுத்து யஷ்பால் சிங்கிடம் அவுட் ஆனார். பஞ்சாப் அணி 29 ஓவர்கள் முடிவில் 185/3 என்று இருந்த்து. அதாவது 21 ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 139 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
ஆனால் யுவராஜ் சிங் அதிரடி ஆட்டம் ஆடினார். இவருடன் எம்.சிதானா (46) உறுதுணையாக ஆட 12 ஓவர்களில் 85 ரன்களை இருவரும் 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். அப்போது சதம் எடுக்கும் வாய்ப்புடன் 98 ரன்களில் இருந்த யுவராஜ் சிங் எல்.பி.ஆகி வெளியேறினார். இவர் அவுட் ஆன அதே ஓவரில் மிக முக்கிய விக்கெட்டான குர்கீரத் சிங்கும் நடையைக் கட்டினார்.
ஆனால் சிதானா (46), கேரா (13) ஆகியோர் ஸ்கோரை 47வது ஓவரில் 305ரன்களுக்கு எடுத்துச் சென்றனர். கடைசியில் ஹர்பஜன் சிங் 8 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 16 ரன்கள் எடுத்து பஞ்சாப் வெற்றியையும் காலிறுதி நுழைவையும் உறுதி செய்தார்.
பஞ்சாப் காலிறுதியில் நுழைந்ததையடுத்து இப்பிரிவிலிருந்து மும்பை அணி வெளியேறியது.