

தமிழகத்தில் கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் நோயாளிகளுக்கு ஆதரவு அளி்க்கும் வகையில், 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழங்கியுள்ளது.
நாடுமுழுவதும் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து,நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், ஆயிர்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.
இதில் ஐபிஎல் டி20 தொடரில் உள்ள 8 அணிகளும் வீரர்களும், தங்களால் முடிந்த உதவிகளை கரோனாவுக்கு எதிரான போருக்கு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் வழங்கி வருகின்றனர்.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 450 ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்களை வழங்கியுள்ளதாக அந்த அணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் முன்னிலையில், தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரூபா குருநாத், மற்றும் சிஎஸ்கே அணியின் இயக்குநர் ஆர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் 450 ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்களை வழங்கினர்.
தன்னார்வ தொண்டு நிறுவனமான பூமிகா அறக்கட்டளை இந்த ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்களை பகிர்ந்தளிப்பது உள்ளிட்ட தேவையான உதவிகளை சிஎஸ்கே அணிக்கு வழங்கும்.
முதல்கட்ட ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் வந்துள்ளன, அடுத்த கட்டமாக அடுத்த வாரத்தின் தொடக்ததில் வந்து சேரும் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்தது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் கோவிட் சிகிச்சை மையங்கள் ஆகியவற்றுக்கு இந்த ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் வழங்கப்படும்.
'மாஸ்க் போடு' எனும் பிரச்சாரத்தையும் சிஎஸ்கே அணி சார்பில் சமூக வலைத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது,
சிஎஸ்கே அணயின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் கூறுகையில் “சென்னை மக்கள், தமிழக மக்களின் இதயத்துடிப்பாக சிஎஸ்கே அணி இருக்கிறது. கரோனா வைரஸுக்கு எதிராக அனைவரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்” எனத் தெரிவித்தார்.