

இந்தியாவில் கரோனா 2-வது அலை தீவிரமாக இருந்து வரும் நிலையில், அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவுவதற்காக ரூ.7.5 கோடியை நிவாரண நிதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அறக்கட்டளையான ராயல் ராஜஸ்தான் அறக்கட்டளை மற்றும் பிரிட்டன் ஏசியன் அறக்கட்டளை இணைந்து இந்த நிதியுதவியை அறிவித்துள்ளன.
இந்தியாவில் கரோனா 2-வது அலை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3.79 லட்சம் மக்கள் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்புக்கு உடனடியாக உதவும் நோக்கில் ரூ.7.5 கோடி (10 லட்சம் அமெரிக்க டாலர்கள்) நிவராண நிதியை வழங்குவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்ட அறிவிப்பில், “ இந்தியாவில் கரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவும் நோக்கில் ரூ.7.5 கோடியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது பங்களிப்பாக வழங்குகிறது.
வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள், அணி மேலாண்மை நிர்வாகிகள் முன்வந்து நிதியுதவி அளித்துள்ளார்கள். பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட்டுடன் இணைந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அறக்கட்டளை இந்த உதவியை வழங்குகிறது.
கரோனா பாதிப்பில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு உதவும் நோக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அறக்கட்டளையின் தலைவர் ரஞ்சித் பரத் தாக்கூர் தலைமையில் இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் பாட் கம்மின்ஸ், ரூ.29 லட்சம் நிதியுதவியை (50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள்) பிஎம் கேர்ஸ் நிதிக்கு அளித்திருந்தார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட்லீயும் ஒரு பிட்காயின் நிதியுதவி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.