

கடந்த ஐபிஎல் போட்டிகளில் நடந்த ஸ்பாட் பிக்சிங் உள்ளிட்ட ஊழல்களினால் பிசிசிஐ மீது படிந்த கறையை அகற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது 86-வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.
முதல் நடவடிக்கையாக, ஐசிசி தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் நீக்கப்பட்டார். | அதன் விவரம் - >ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கம் |
மும்பையில் இன்று நடைபெற்ற 86-வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பிசிசிஐ மேலும் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
பிசிசிஐ-யின் முக்கிய பிரச்சினையாக உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டிய லாப நோக்கிலான இரட்டைப் பதவி வகிக்கும் நடைமுறையை அகற்றும் விதமாகவும், இந்த விவகாரம் குறித்து புகார்கள் எழுந்தால் அதனை கவனித்துக் கொள்ளவும் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சில முக்கிய மாற்றங்கள்:
* இந்திய இளையோர் அணித் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
* புனே, ராஞ்சி, இந்தூர், ராஜ்கோட், விசாகப்பட்டிணம் மற்றும் தரம்சலா மைதானங்களுக்கு டெஸ்ட் போட்டியை நடத்தும் தகுதி வழங்கப்பட்டுள்ளது.
* பிசிசிஐ டெக்னிகல் கமிட்டியில் அனில் கும்ளேவுக்குப் பதிலாக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
* இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு டெல்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தை நவம்பர் 17-ம் தேதிக்குள் தயார்ப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மைதானம் தயாராகவில்லையெனில் புனேவில் டெஸ்ட் போட்டி நடைபெறும்.
* ராஜீவ் சுக்லா, ஜோதிர் ஆதித்யா சிந்தியா, அஜய் ஷிர்கே, பாந்தவ், கங்குலி ஆகியோர் ஐபிஎல் ஆட்சிக்குழுவின் உறுப்பினர்களாவர். இது 23 உறுப்பினர்களிலிருந்து 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
* ரோஜர் பின்னி நீக்கப்பட்டு தெற்கு மண்டல அணித் தேர்வு உறுப்பினராக முன்னாள் வீரர் எம்.எஸ்.கே.பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல் ரஜீந்தர் சிங் ஹான்ஸ் நீக்கப்பட்டு பதிலாக ககன் கோடா தேர்வுக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
* ரவிசாஸ்திரி ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
ரோஜர் பின்னி நீக்கம் குறித்து பிசிசிஐ...
"ராஜர் பின்னி அணித் தேர்வுக்குழுவில் இருப்பதனால் ஸ்டூவர்ட் பின்னி அணியில் தேர்வு செய்யப்படுவது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது, இந்தப் பார்வை மாற வேண்டும். ஸ்டூவர்ட் பின்னிக்கு நாம் அநீதி இழைக்கக் கூடாது.
ராஜர் பின்னியின் மகன் என்பதனாலேயே ஊடகங்களின் விமர்சனங்களை அவர் எதிர்கொள்வது கூடாது. கூடிய வரையில் வெளிப்படையாக பிசிசிஐ செயல்பட எங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம்" என்று பிசிசிஐ தலைவர் ஷஷாங் மனோகர் விளக்கம் அளித்தார்.