

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டுத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்று நாடு திரும்பியது.
டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வி அடைந்த இந்திய அணி , அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளி்ல் ஆஸி. அணிக்கு கடும் சவால் அளித்தது. மெல்போர்னில் நடந்த 2-வது போட்டியில் வென்ற இந்திய அணி, சிட்னியில் நடந்த 3-வது டெஸ்டை டிரா செய்தது.
பிரி்ஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று புதிய வரலாற்றை இந்திய அணி படைத்தது. கடந்த 32 ஆண்டுகளாக பிரிஸ்பேன் மைதானத்தில் தோல்வி அடையாமல் இருந்த ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து இந்திய அணி வரலாறு படைத்தது. தொடர்ந்து 2-வது முறையாக பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் இந்திய அணி வென்றது.
இந்திய அணியின் வெற்றி குறித்து பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். அவர் கூறுகையில் “ இந்த மாதம் இந்திய கிரிக்கெட் ஆடுகளத்தில் இருந்து நல்ல செய்தி கிடைத்தது.
தொடக்கத்தில் சரிவு காணப்பட்டாலும், இந்திய அணி உற்சாகமாக மீண்டு எழுந்து, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது. நம்முடைய அணியின் கடின உழைப்பு, கூட்டு உழைப்பு உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது” எனப் பாராட்டியிருந்தார்.
பிரதமர் மோடியின் பாராட்டுக்கு பதில் அளித்து பிசிசிஐ அமைப்பு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளது. அதில் “ பிரதமர் மோடியின் ஊக்கமளிக்கும், உத்வேகம் அளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி. தேசியக் கொடியை உயரப் பறக்கவிடும் அனைத்து வெற்றிகரமான செயல்களையும் இந்திய அணி தொடர்ந்து செய்யும்” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், விராட் கோலி, ரஹானே, ரவி சாஸ்திரி, ரிஷப்பந்த், ஜஸ்பிரித் பும்ரா, ஜெய் ஷா, கங்குலி, தாக்கூர் ஆகியோருக்கு டேக் செய்யப்பட்டது.