

14-வது ஐபிஎல் டி20 தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவை தக்கவைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், கேதார் ஜாதவ், முரளி விஜயன், பியூஷ் சாவ்லா ஆகியோர் கழற்றிவிடப்படலாம் எனத் தெரிகிறது.
ஷேன் வாட்ஸன் கிரிக்கெட்டிலிருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டார், ஹர்பஜன் சிஎஸ்கேயுடனான ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக இன்று அறிவித்துள்ளார். ஆதலால், ஜாதவ், சாவ்லாவை தக்கவைக்கும் முடிவு தோனியின் கையில் இருக்கிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம்,மே.இ.தீவுகள் வீரர் டுவைன் பிராவோ, தென் ஆப்பிரி்க்க வீரர் டூப்பிளசிஸ் ஆகியோர் தக்கவைக்கப்படுவார் என சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
14-வது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை 21-ம் தேதிக்குள் ஐபிஎல் நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும். சிறிய அளவிலான ஏலம் பிப்ரவரி 2 அல்லது 3-வது வாரத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் நடப்பு ஆண்டு ரூ.85 கோடிக்கு மேல் ஏலத் தொகை உயர்த்தப்பட வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அனைத்து அணிகளும் தங்களிடம் இருக்கும் விலை உயர்ந்த வீரர்களை விடுவித்து, தொகையை அதிகப்படுத்திக்கொண்டு, ஏலத்தில் புதிய வீரர்களை எடுக்க ஆயத்தமாகி வருகின்றன.
இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாக வட்டாரங்கள் கூறுகையில் “ சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே குடும்பத்தில் ஓர் அங்கம். ஆதலால், அவர் தக்கவைப்போம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சொந்த பணி காரணமாக ரெய்னா நாடு திரும்பினார். அவரின் கோரிக்கையை சிஎஸ்கே நிர்வாகம் மதிக்கிறது.
கேதார் ஜாதவ், பியூஷ் சாவ்லா, முரளி விஜய் ஆகியோரின் நிலை ஊசலாட்டத்தில் இருக்கிறது. இவர்கள் பற்றி உறுதியாகக் கூற முடியாது. பிசிசிஐ அமைப்பிடம் இறுதி வீரர்கள் பட்டியல் அளிக்கும்போதுதான் இவர்கள் நிலை என்னவென்று தெரியும்.
பெரும்பாலும் முக்கிய வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள். ஹர்பஜன் சிங் விடைபெற்றுவிட்டார், வாட்ஸன் ஓய்வு பெற்றுவிட்டார். டூப்பிளசிஸ், பிராவோ தக்கவைக்கப்படுவார்கள். மற்றவகையில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை” எனத் தெரிவிக்கின்றன.