

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மும்பை அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது ஹைதராபாத் அணி. இந்த சீசனில் ஹைதராபாத் அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது.
கோவாவில் உள்ள திலக் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 38-வது நிமிடத்தில் மும்பை அணி முதல் கோல் அடித்தது. வலது டச்லைனில் இருந்து 120 அடி தூரத்தை கடந்து அகமது ஜஹூவு ஹைதராபாத் அணியின் பாக்ஸ் பகுதி இடது பக்கத்தில் இருந்த பிபின் சிங்குக்கு பந்தை உதைத்தார். அவர் நொடிப்பொழுதில் பாக்ஸின் மையப் பகுதியில் இருந்த விக்னேஷ் தட்சிணாமூர்த்திக்கு பாஸ் செய்ய, அவர் அதனை அபாரமாக கோல் வலைக்குள் செலுத்தினார். இதனால் மும்பை அணி முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் ஹைதராபாத் அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அதேவேளையில் 59-வது நிமிடத்தில் மும்பை அணியின் வீரர்ரோலின் போர்ஜஸ் உதவியுடன் ஆடம் லே போஃண்ட்ரே கோல் அடித்து அசத்தினார். இதனால் மும்பை அணி 2-0 என்ற முன்னிலையை நோக்கி நகர்ந்தது. இதன் பின்னர் கடைசி வரை போராடியும் ஹைதராபாத் அணியால் பதில் கோல் அடிக்க முடியாமல் போனது.
முடிவில் மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது மும்பை அணிக்கு 5-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 7 ஆட்டங்களில் 5 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் ஹைதராபாத் அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 2 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.