

ஐபிஎல் 2020-யில் 2 சதங்களை அடித்து பிரமாத பார்மில் இருக்கும் ஷிகர் தவண் நேற்று தனது முந்தைய அணியான சன் ரைசர்ஸுக்கு எதிராகவே தன் வேகத்தைக் காட்டி 78 ரன்கள் விளாசினார்.
ஆனால் கடைசியில் சந்தீப் சர்மா வீசிய புல்டாசில் கால்காப்பில் வாங்கி எல்.பி.அவுட் கொடுக்கப்பட ரிவியூ செய்யாமல் வெளியேறினார் தவண்.
ஆனால் ரீப்ளேயில் பந்து ஸ்டம்ப் திசையில் இல்லை வெளியே செல்லும் பந்து என்பது தெள்ளத் தெளிவானது இதனையடுத்து பவுண்டரி அருகே சென்று தவறை உணர்ந்தார் ஷிகர் தவண்.
இவரது இந்தத் தவறினால் கடைசி 2 ஓவர்களில் பவுண்டரியே வரவில்லை, டி.நடராஜன், சந்தீப் பிரமாதமாக வீசினர். ஷிகர் நின்றிருந்தால் ஒருவேளை 200 ரன்களைக் கூட எட்டியிருக்கலாம். இப்படிப்பட்ட தவற்றைச் செய்த ஷிகர் தவணை இந்திய முன்னாள் இடது கை நட்சத்திரம் யுவராஜ் சிங் கிண்டல் செய்தார்.
அவர் தன் ட்வீட்டில், “கடைசி 2 ஓவர்களில் ஹைதராபாத் பவுலர்கள் அசத்தி ஆட்டத்தை திருப்பினர். நடராஜன், சந்தீப் ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட வரவில்லை. அழுத்தமான போட்டியில் துல்லியமான பந்து வீச்சு. ஷிகர் தவண் நல்ல பார்மில் இருக்கும் வீரர், ஏன் ப்ரோ டி.ஆர்.எஸ். என்ன ஆயிற்று? ஏன் முறையீடு செய்யவில்லை? ஆட்டம் இன்னும் இருக்கிறது என்பதையே வழக்கம் போல் மறந்து விட்டாயோ?” என்று கேலி செய்திருந்தார்.
இதற்கு ஷிகர் தவணும் பதில் அளித்திருந்தார். அவர் பதிலில், “பிளம்ப் அவுட் என்று நினைத்து விட்டேன், ஆனால் பெவிலியன் செல்லும்போது பவுண்டரி அருகே தவறை உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார்.