

கிங்ஸ் லெவன் பஞ்சாபை 153/6 என்று மட்டுப்படுத்திய சிஎஸ்கே, பிறகு 23 வயது இளம் நட்சத்திரம் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டுமொரு அபாரமான அதிரடி அரைசதம் எடுக்க 154/1 என்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
டுபிளெசிஸ் (48) உடன் ருதுராஜ் பிரமாதமாக ஆடினார். ஐபிஎல் தொடரில் ருதுராஜ் 62 நாட் அவுட், 72, 65 நாட் அவுட் என்று பிரமாதமாக முடித்துள்ளார், பந்துகளை நன்றாக மிடில் செய்கிறார். ஆனால் இடைவெளிகளைக் கண்டுபிடிப்பதில் அவர் அடுத்த ஆண்டு வல்லவராக உருவாவார் என்று எதிர்பார்க்கலாம். நம்பகமான, குட்ப்ளேயர் ரகத்தைச் சேர்ந்தவர்.
ஆனால் நேற்று 20 ரன்களில் அவர் மந்தீப் கேட்சுக்கு ஆட்டமிழந்த போது நடுவருக்கு எழுந்த ஐயத்தினால் பிழைத்து இன்னொரு அரைசதத்திற்குச் சொந்தக்காரர் ஆனார்.
இந்நிலையில் ஃபாப் டுபிள்சிஸ் கூறியதாவது:
ஸ்கூப் ஷாட் நான் அடிக்கடி ஆடும் ஷாட் தான். ஏமாற்றமான ஐபிஎல் சீசன், கடைசியில் 3 வெற்றியுடன் முடித்தோமே அதுவே திருப்தி அளிக்கிறது.
ருதுராஜ் கெய்க்வாட் இளம் கோலி போல் இருக்கிறார், என்ன அவர் அப்படித்தானே ஆடுகிறார்?! அவரைப் பற்றி யோசிக்கும் போது எனக்கு தோன்றுவது என்னவெனில் இக்கட்டான சூழ்நிலைகளில் நிமிர்ந்து நடைபோடுகிறார்.
இந்தத் தரத்தைத்தான் நாம் இளம் வீரர்களிடம் எதிர்பார்க்கிறோம். அதாவது அவர்கள் அடுத்த மட்ட உயரத்துக்குச் செல்ல இந்த தரம் அவசியம். இது ருதுராஜிடம் இருப்பதாகவே கருதுகிறேன்.
அடுத்த ஆண்டு...? இந்தக் கேள்விக்கு அன்றே நான் பதிலளித்து விட்டேன். ரெட் வைன் இந்த வார்த்தையைத்தான் நான் பயன்படுத்துவேன். இன்னமும் எனக்கு பிடித்திருக்கிறது.
என்னிடம் நிறைய கிரிக்கெட் ஆட்டம் பாக்கியிருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகள் கிரிக்கெட் என்னிடம் உள்ளது, என்றார் டுபிளெசிஸ்.