2011-ல் தோனியின் கேப்டன்சியை என் முழு அதிகாரத்தையும் பயன்படுத்திக் காப்பாற்றினேன்: சீனிவாசன் பேட்டி

2011-ல் தோனியின் கேப்டன்சியை என் முழு அதிகாரத்தையும் பயன்படுத்திக் காப்பாற்றினேன்: சீனிவாசன் பேட்டி
Updated on
1 min read

2011 உலகக்கோப்பை வென்ற கேட்பன் தோனியின் கேப்டன்சிக்கு அவர் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் தோல்வி அடைந்த போது குந்தகம் ஏற்பட்டது. அப்போது தான் தன் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி தோனியின் கேப்டன்சியைக் காப்பாற்றியதாக முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதில் குறிப்பாக ஆஸ்திரேலியாவிடம் ஒயிட்வாஷ் வாங்கியதையடுத்து தோனியை கேப்டன்சியை விட்டுத் தூக்க வேண்டும் என்று அணித்தேர்வுக்குழுவினர் முடிவெடுத்தனர். அப்போதைய பிசிசிஐ சட்ட விதிமுறைகளின் படி எந்த முடிவாக இருந்தாலும் வாரியத் தலைவர் சீனிவாசனின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் எடுக்க முடியும்.

இந்நிலையில் ஆங்கில ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரஸுக்குக் கூறிய சீனிவாசன், “அது 2011. உலகக் கோப்பையை வென்றோம், ஆஸ்திரேலியாவில் சரியாக ஆடவில்லை. எனவே தேர்வுக்குழுவில் ஒருவர் தோனியை கேப்டன்சியை விட்டு நீக்க வேண்டும் என்று விரும்பினார். ஒருநாள் அணி கேப்டன் பதவியிலிருந்து தோனியை நீக்க முடிவெடுத்தனர். அதெப்படி? அப்போதுதான் உலகக்கோப்பையை அவர் தலைமையில் வென்றுள்ளோம், ஒருநாள் அணி கேப்டன்சியிலிருந்து எப்படி நீக்கமுடியும்?

ஒரு விடுமுறை நாள், நான் கால்ஃப் ஆடிக்கொண்டிருந்தேன். திரும்பி வந்தேன், சஞ்சய் ஜக்தாலே அப்போது பிசிசிஐ செயலர். அப்போது அவர் சொன்னார், ‘அவர்கள் கேப்டனைத் தேர்வு செய்ய மறுக்கின்றனர். தோனி வீரராக மட்டுமே தொடர முடியும் என்கின்றனர்’ என்றார். நான் அப்போது, எம்.எஸ்.தோனிதான் கேப்டனாக நீடிப்பார் என்று பிசிசிஐ தலைவராக நான் அதிகாரத்தைப் பயன்படுத்தினேன்.” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, ‘சிஎஸ்கேவுக்கு தோனி விரும்பும் வரை விளையாடலாம். இப்போது ஐபிஎல்-ஐ சிஎஸ்கே வெல்லட்டும். தோனியின் தலைமையின் கீழ் சிஎஸ்கேவின் வெற்றிக்குக் காரணம் போட்டியைத் தாண்டி எதையும் சிந்திக்க மாட்டார். அவர் பாதை விலக மாட்டார், அதே கொள்கையைத்தான் இப்போதும் கடைப்பிடிப்பார்.’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in