குறைந்த வேகத்தில் ஒரு பயங்கர யார்க்கர்.. கீழே விழுந்து மண்ணைக்கவ்விய பேட்ஸ்மேன்... பறந்தன ஸ்டம்புகள்

குறைந்த வேகத்தில் ஒரு பயங்கர யார்க்கர்.. கீழே விழுந்து மண்ணைக்கவ்விய பேட்ஸ்மேன்... பறந்தன ஸ்டம்புகள்
Updated on
1 min read

இங்கிலாந்து கவுண்ட்டி அணியான யார்க்‌ஷயரைச் சேர்ந்த மேத்யூ ஃபிஷர் என்ற (மித) வேகப்பந்து வீச்சாளர், அவ்வளவு வேகம் இல்லாத, வேகம் குறைந்த ஒரு இன்ஸ்விங்கிங் யார்க்கரை வீச அதன் மூலம் தன் பாதங்களை காயத்திலிருந்து காத்துக் கொள்ளும் முயற்சியில் கிரீசில் குப்புற அடித்து விழுந்தார் டர்ஹாம் அணி பேட்ஸ்மென் ஆனால் பந்து ஸ்டம்புகளைப் பெயர்த்தது.

மெதுவான யார்க்கர்தான் ஆனால் ஸ்டம்புகள் வண்டிச்சக்கரம் போல் உருண்டன. இந்த ஸ்லோ யார்க்கர் பந்தை யார்க்‌ஷயர் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளது.

ஒருமுறை நியூஸிலாந்து தொடக்க வீரர் பிரையன் யங் என்பவர் வக்கார் யூனிஸின் பயங்கர அதிவேக யார்க்கரில் தன் பாதங்களை காப்பாற்றி கொள்ள அதை விலக்கும் போது சாஷ்டாங்கமாக கிரீசில் விழுந்தார், ஸ்டம்ப் பறந்தது. இங்கிலாந்தின் மிகப்பெரிய ஆல்ரவுண்டர் இயன் போத்தமுக்கு ஒருமுறை வாசிம் அக்ரம் வீசிய யார்க்கர் போத்தம் போன்ற ஆகிருதியையே கீழே தள்ளி மண்ணைக் கவ்வச்செய்தது.

அக்தர் ஒருமுறை 3 ஒவர்களில் ஆஸ்திரேலிய அணியையே யார்க்கரில் காலி செய்ததும் நினைவுகூரத் தக்கது.

1985 மினி உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வீரர் காசிம் ஓமருக்கு கபில் வந்து நின்றவுடன் வீசிய யார்க்கரை இன்று வரை மறக்க முடியாது. அதே போல் 1983 ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் மே.இ.தீவுகள் பேட்ட்ங் ஆகிருதி விவ் ரிச்சர்ட்ஸுக்கு ஒரு ஓவர் முழுக்க யார்க்கராக வீசினார் கபில்தேவ், அந்த ஓவரின் முடிவில் ரிச்சர்ட்ஸின் மட்டை கீழே லேசாக உடைந்ததை அவரே கபிலிடம் சிரித்தபடி காட்டியதும் நடந்துள்ளது. இலங்கையின் ருமேஷ் ரத்னாயகா என்ற பவுலர் மிக அழகாக பந்து காற்றில் ரோல் ஆகியபடியே செல்லும் யார்க்கர்களை வீசக் கூடியவர். இப்போது பும்ராவின் யார்க்கர்களை நாம் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் இங்கிலாந்து கவுண்டியான பாப் விலிஸ் கோப்பை போட்டி ஒன்றில் யார்க்‌ஷயர் பவுலர் மேத்யூ ஃபிஷர் டர்ஹாம் அணி பேட்ஸ்மன் ஜாக் பர்ன்ஹாமுக்கு ஒரு அற்புதமான, ஆனால் வேகம் அதிகமற்ற இன்ஸ்விங்கிங் யார்க்கரை வீசினார். விளையாட முடியாத பந்தானது அது என்பதோடு மட்டையாளனின் பாதங்களைப் பெயர்க்கும் வகையில் வளைந்து சென்றது, காயத்தை தவிர்க்க ஜாக் பர்ன்ஹாம் குப்புற கீழே விழ நேரிட்டது. ஸ்டம்ப்கள் பறந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in