Last Updated : 07 Feb, 2020 06:32 PM

 

Published : 07 Feb 2020 06:32 PM
Last Updated : 07 Feb 2020 06:32 PM

நாளை2-வது போட்டி: ஒருநாள் தொடரைத் தக்கவைக்குமா இந்திய அணி? வீரர்கள் மாற்றத்துக்கு வாய்ப்பு: 6.8 அடி உயர நியூஸி. பந்துவீச்சாளர் அறிமுகம்

ஆக்லாந்தில் நாளை பகலிரவாக நடக்கும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி தொடரைத் தக்கவைக்கும் முனைப்புடன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்கும்.

நியூஸிலாந்து மண்ணில் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி அளித்தது. இந்த வெற்றி ஒருநாள் போட்டித் தொடரிலும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஹேமில்டனில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 347 ரன்கள் குவித்தும், வெற்றி வாய்ப்பை தக்கமுடியவில்லை. பேட்டிங் வரிசையில் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்ட போதிலும், பந்துவீச்சில் எதிர்பார்த்த செயல்பாடு இல்லை. நாளை நடக்கும் போட்டி முக்கியமானதாகும்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே நியூஸிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. நாளை நடக்கும் போட்டியில் வென்றால், தொடரைக் கைப்பற்றிவிடும் என்பதால், இந்திய அணி மிகுந்த எச்சரிக்கையாக விளையாட வேண்டும்.

உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் இந்திய அணி எந்த ஒருநாள் தொடரையும் இழக்கவில்லை என்பதால் நாளை நடக்கும் போட்டியில் வெற்றிக்காகப் போராட வேண்டிய நிலையில் இருக்கிறது.

சமீபத்தில் மேற்கந்தியத்தீவுகள் அணிக்கு எதிராகச் சென்னையில் நடந்த ஆட்டத்திலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மும்பையில் நடந்த ஆட்டத்திலும் இந்திய அணி மோசமான தோல்வியைச் சந்தித்தது. ஆனால், அடுத்து தோல்வியில் இருந்து மீண்டுவந்து தொடரைக் கைப்பற்றியது. அதுபோல நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணி வெல்லக்கூடும்.

இந்திய அணியில் பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது. நாளை நடக்கும் போட்டியில் ஷிவம் துபேவுக்கு பதிலாக மணிஷ் பாண்டே களமிறங்க வாய்ப்புள்ளது. அதேபோல, குல்தீப் யாதவுக்கு பதிலாக சஹலும், ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக ஷைனியும் களமிறங்குவார்கள் என அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹேமில்டன் போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு ஷர்துல் தாக்கூர் பந்துவீசவில்லை, டி20 தொடரிலும் ரன்களை வாரிக் கொடுத்தார் என்பதால், ஷைனிக்கு நாளை களமிறங்க அதிகமான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல ஷிவம் துபேவுக்கு பதிலாக முழுநேர பேட்ஸ்மேனாக மணிஷ் பாண்டேவை தேர்வு செய்யப்படலாம்.

தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் முதல் ஆட்டத்தில் நன்றாக செட்டில் ஆனதால் அவர்கள் கூட்டணி இந்தப் போட்டியில் மாற்ற வாய்ப்பில்லை

ஆக்லாந்து மைதானம்
2-வது ஒருநாள் போட்டி நடக்கும் ஆக்லாந்து செடான்பார்க்க மைதானத்தில் இந்தியா, நியூஸிலாந்து இருஅணிகளும் அதிகபட்சமாக 314ரன்கள் எடுத்துள்ளன. 2014-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி நடந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. இந்த மைதானத்தில் இந்திய அணி. கடந்த 2002, டிச 26-ம் தேதி நடந்த ஆட்டத்துல 108 ரன்களில் இந்திய அணி சுருண்டது.

நியூஸிலாந்து அணி

நியூஸிலாநத்து அணியைப் பொறுத்தவரைக் கடந்த போட்டியில் வெற்றிக்கு நிகோலஸ், லாதம், டெய்லர் முக்கியக் காரணமாக அமைந்தனர். அதிலும் டெய்லரின் பேட்டிங் இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்னமாக இருந்தது. நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்தும் வகையில் கேப்டன் லாதம் விளையாடியது இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குச் சவாலாக இருந்தது. நாளையப் போட்டியில் கப்தில், நிகோலஸ், டெய்லர், லாதம் நிச்சயம் சவாலாக இருப்பார்கள்.

6.8 அடி உயரமுள்ள நியூஸி பந்துவீச்சாளர் கெயில் ஜேமிஸன்

கேப்டன் வில்லியம்ஸன் உடல்நிலை இன்னும்முழுமையாக சரியாகாததால், அவர் 2-வது போட்டியிலும் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது. நியூஸிலாந்து அணியில் 6.8 அடி உயரத்தில் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர் கெயில் ஜேமிஸன் நாளை அறிமுகமாவார் எனத் தெரிகிறது. ஹேமிஸ் பென்னட், சவுதி, குகிலின் ஆகியோர் இருக்கும் நிலையில் ஜேமிஸன் வருகை இன்னும் கூடுதல் பலத்தைத் தரும்.

இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்குப் போட்டித் தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x