

கொழும்பு டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தாலும், இன்னமும் ஒரு டெஸ்ட் உள்ள நிலையில் விக்கெட் கீப்பர் சஹா மற்றும் முக்கிய பேட்ஸ்மென் முரளி விஜய் ஆகியோர் காயம் காரணமாக அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விருத்திமான் சஹாவுக்கு பதிலாக நமன் ஓஜாவும், முரளி விஜய்க்கு பதிலாக கருண் நாயரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் கெண்டைத் தசை காயம் காரணமாக விளையாட முடியாது போன முரளி விஜய், 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார், முதல் இன்னிங்ஸில் ரன் எடுக்காவிட்டாலும் 2-வது இன்னிங்ஸில் அருமையாக விளையாடி 82 ரன்கள் எடுத்திருந்தார், இது இந்திய வெற்றியில் பெரும் பங்காற்றியது என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில் அவர் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது அதே காயம் கொஞ்சம் அதிகரித்துள்ளது, எனவே அவருக்கு ஓய்வு தேவை என்று கருதியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. சஹாவும் இதே காயம் காரணமாகவே தற்போது விலகியுள்ளார், இந்த டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸ் முழுதும் லோகேஷ் ராகுல்தான் விக்கெட் கீப்பிங் செய்தார், அதோடு, இன்று காலை மேத்யூஸுக்கு அட்டகாசமான டைவிங் கேட்ச் ஒன்றையும் பிடித்து அசத்தியுள்ளார் ராகுல்.
தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக அருமையான சதம் அடித்து தோல்வியிலிருந்து காப்பாற்றிய இந்தியா ஏ அணி வீரர் கருண் நாயர் அணிக்கு வந்துள்ளார்.
ரஞ்சி இறுதியில் முச்சதம் கண்டவர் கருண் நாயர், அதே போல் நமன் ஓஜாவும் உள்நாட்டு தொடர்களில் ரன்களை பெருமளவு குவித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.