ஒரே ஓவரில் 6 சிக்ஸர்: ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங்கிற்கு அடுத்தார்போல் 7-வது வீரராக நியூஸி வீரர் சாதனை

லியோ கார்ட்டர் : கோப்புப்படம்
லியோ கார்ட்டர் : கோப்புப்படம்
Updated on
1 min read

ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் உலகின் 7-வது பேட்ஸ்மேனாக நியூஸிலாந்தின் லியோ கார்டர் இடம் பெற்றுள்ளார்.

நியூஸிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் டி20 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் கான்டர்பரி கிங்ஸ், மற்றும் நார்தன் நைட்ஸ் அணிகளுக்கும் இடையே நேற்று லீக் ஆட்டம் நடந்தது.

இதில் கான்டர்பரி கிங்ஸ் அணியின் இடதுகை பேட்ஸ்மேன் லியோ கார்ட்டர் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து புதிய மைல்கல்லை எட்டினார்.

நார்த்தன் நைட்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆன்டன் டெவ்சிச் வீசிய பந்தில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை லியோ கார்டர் விளாசினார். லியோ கார்டர் 29 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து தனது அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

உலகளவில் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 6 பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஒரு ஓவருக்கு 6 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். அதில் கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி, ஹெர்சலே கிப்ஸ், யுவராஜ் சிங், வோர்செஸ்டர்ஷையர் அணி வீரர் ராஸ் வொய்ட்லி, ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் ஆகியோர் இருந்தனர். இப்போது 7-வது பேட்ஸ்மேனாக லியோ கார்டரும் இணைந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் டி20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்த 4-வது வீரரும் லியோ கார்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் டி20 போட்டிகளில் யுவராஜ் சிங்(2007), வொய்ட்லி(2017), ஹஸ்ரத்துல்லா ஜஜாய்(2018) ஆகியோர் இருந்த நிலையில் 4-வது வீரராக லியோ கார்டர் இடம் பெற்றுள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in