

இந்திய ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து வான் அஸ்ஸை நீக்குமாறு ஹாக்கி இந்தியா சிறப்புக் குழு பரிந்துரைத்துள்ளது. இதனால் வான் அஸ் நீக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரியில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நெதர்லாந்தைச் சேர்ந்த வான் அஸ் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப் நகரில் நடந்த உலக ஹாக்கி லீக் அரையிறுதியின்போது ஹாக்கி இந்தியா தலைவர் நரீந்தர் பத்ரா, இந்திய வீரர்களிடம் இந்தியில் பேசியுள்ளார். அப்போது குறுக்கிட்ட வான் அஸ், பத்ராவை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து இமாசலப் பிரதேசத்தில் தொடங்கிய இந்திய அணியின் பயிற்சி முகாமில் வான் அஸ் பங்கேற்கவில்லை. அது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, பயிற்சியாளர் பதவியிருந்து தன்னை நீக்கிவிட்டார்கள் என கூறியிருந்தார். ஆனால் ஹாக்கி இந்தியா தலைவர் நரீந்தர் பத்ராவோ அதை மறுத்தார்.
இந்த நிலையில் வான் அஸ் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக ஹாக்கி இந்தியாவின் 9 உறுப்பினர்கள் அடங்கிய சிறப்புக் கமிட்டியின் கூட்டம் பத்ரா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அந்த கமிட்டி, பயிற்சியாளர் பதவியிலிருந்து வான் அஸ்ஸை நீக்குமாறு பரிந்துரைத்துள்ளது.
பத்ரா ஒரு எதேச்சதிகாரி: வான் அஸ்
இது தொடர்பாக வான் அஸ்ஸிடம் கேட்டபோது, “அவர்கள் இப்போது எடுத்திருக்கும் முடிவு எனக்கு தெரிந்ததுதான். அதனால் அதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. அதிகாரப்பூர்வமாக என்னை நீக்குவதற்கான வழியைக் கண்டுபிடித்து என்னை நீக்கியிருக்கிறார். பத்ரா எனது பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளார். அதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும். அவரை நான் சர்வாதிகாரி என்று அழைக்கமாட்டேன். அவர் ஒரு எதேச்சதிகாரி. அவர் ஒருவரே எல்லா முடிவுகளையும் தனியாளாக எப்படி எடுக்க முடியும்? தனது அகங்காரத்தை தீர்த்துக் கொள்வதற்காக எப்படி என்னை நீக்க முடியும்?
இந்த விவகாரத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து இதுவரை யாருமே என்னை தொடர்புகொள்ள முயற்சிக்கவில்லை. இந்த விஷயத்தில் எந்தவொரு தனிநபர் மீதும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. இந்திய ஹாக்கி அமைப்பில் உள்ள பலவீனமாகவே இதை பார்க்கிறேன்” என்றார்.