

ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சரில் பின் கழுத்தில் அடி வாங்கி நிலைகுலைந்து விழுந்த ஸ்மித் பெவிலியன் திரும்பினார், ஆனால் பீட்டர் சிடில் அவுட் ஆனவுடன் உடனடியாக இறங்கினார் தைரிய ஸ்மித்.
லார்ட்ஸ் ரசிகர்கள் மீண்டும் கரகோஷம் செய்து அவரை களத்திற்கு வரவேற்றனர்.
இன்னிங்சின் 86வது ஒவரை புதிய பந்தில் கிறிஸ் வோக்ஸ் வீச அருமையான ஆஃப் ஸ்டம்ப் பந்து சிடில் மட்டையின் விளிம்பில் பட்டு பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆக 9 ரன்களில் சிடில் வெளியேறினார்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் காயமடைந்த ஸ்மித் மீண்டும் இறங்க லார்ட்ஸ் அதிர்ந்தது. அதே ஓவரில் தான் எதிர்கொண்ட முதல் பந்தை தடுத்தாடினார்,
ஆனால் அடுத்த பந்தை ஒரு டி20 பாணியில் மிட்விக்கெட்டில் தூக்கி அடித்து பவுண்டரிக்கு அனுப்பினார்.
அதற்கு அடுத்த பந்துதான் உண்மையில் ‘ஜீனியஸ்’ என்பதை பறைசாற்றிய அந்த ஷாட்டை ஆடினார். வோக்ஸ் வீசிய பந்து ஷார்ட் ஆஃப் லெந்திலிருந்து ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வர பின் காலில் சென்று ஒரு ‘பஞ்ச்’ செய்தார் பந்து கவர் பவுண்டரிக்குப் பறந்தது. மிகப்பிரமாதமான பேக்ஃபுட் பஞ்ச்.
அடி வாங்கிய சுவடே அவரிடம் தெரியவில்லை. இந்நிலையில் 80 ரன்களிலிருந்து 88 வந்த ஸ்மித், மீண்டும் கிறிஸ் வோக்ஸ் ஓவரை எதிர்கொள்ள ஒரு எட்ஜ் பவுண்டரியை தேர்ட் மேனில் அடித்து 92 ரன்களுக்கு வந்தார். கல்லி நிறுத்தியிருந்தால் அது கேட்ச் ஆகியிருக்கும்.
ஆனால் அதற்கு அடுத்த பந்தே கால்காப்பில் வாங்கினார், மெல்லிய எல்.பி.அப்பீல், அதற்கு அடுத்த பந்து இன்ஸ்விங்கராகி உள்ளே வர நேரே வந்த பந்தை ஆடாமல் விட்டார் ஸ்மித் கால்காப்பைத் தாக்க நடுவர் கையை உயர்த்தினார், தவறு என்று தெரிந்தும் ரிவியூ கேட்டார் ஸ்மித், ஆனால் அது பிளம்ப் எல்.பி.ஆக 92 ரன்களில் ஹாட்ரிக் சதம் எடுக்க முடியாமல் பெவிலியன் திரும்பினார். 161 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 92 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார்.
பெரிய அடி வாங்கி ‘கன்கஷன்’ சோதனையில் அவருக்கு ஒன்றுமில்லை என்று தெரிய நேரத்தை விரயம் செய்யாமல் அடுத்த விக்கெட் விழுந்தவுடன் தைரியமாக இறங்கினார் ஸ்மித். ஹாட்ரிக் சதம் அடித்திருந்தால் அது பெரிய பேசு பொருளாகியிருக்கும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். வோக்ஸ் அந்த ஓவரை நன்றாக வீசினார். ஆஸ்திரேலியா தற்போது 235/8 என்று உள்ளது.