

புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் பிளே ஆஃப் சுற்றில் காலியாக உள்ள ஓரிடத்துக்கு 5 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நடப்பு ஐபிஎல் சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை ஏற்கெனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன.
அதேநேரத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (18 புள்ளிகள்) அணி, முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை வீழ்த்தியதால் 16 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. அதுமட்டுமல்லாமல் குஜராத் டைட்டன்ஸ் அணியும் 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.
தற்போது பிளே ஆஃப் சுற்றில் எஞ்சிய ஓர் இடத்துக்கு 5 முக்கிய அணிகள் மல்லுக்கட்டுகின்றன. இதுவரை 63 ஆட்டங்கள் (நேற்று நடைபெற்ற ராஜஸ்தான்-லக்னோ ஆட்டத்தை சேர்க்காமல்) முடிந்துள்ளன. தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோவை வரும் 23-ம் தேதி சந்திக்க உள்ளது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் 15 புள்ளிகளை பெற்றுவிடும்.
அதேநேரத்தில் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தே பஞ்சாப் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்பது தெரியும்.அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் மீதமுள்ளன. 12 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி லக்னோ அணியையும், வரும் 24-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் 16 புள்ளியை எட்டி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்யும். ஒரு வேளை ஒரு போட்டியில் மட்டும் தோல்வி கண்டால், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விக்காக அந்த அணி காத்திருக்க நேரிடும்.
12 புள்ளிகளுடன் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் அணியுடன் மோதுகிறது. இதில் சிஎஸ்கே கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணி 14 புள்ளிகளைப் பெற்று மற்ற அணிகளின் வெற்றி, தோல்விக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனாலும், சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
ஒருவேளை கடைசி ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வி கண்டால், அந்த அணி போட்டியிலிருந்து வெளியேறி விடும். சிஎஸ்கே அணியைப் போலவே, டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் 12 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா அணியைச் சந்திக்கிறது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு இன்னும் 2 ஆட்டம் பாக்கி உள்ளது. 11 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி இன்று (மே 20) மும்பையையும், 24-ம் தேதி டெல்லியையும் எதிர்கொள்கிறது.
இதில் இரண்டிலும் வென்றால் 15 புள்ளிகளை கொல்கத்தா அணி எட்டும். அப்படியே வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்தே அந்த அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு அமையும். ஒருவேளை ஒரு போட்டியில் தோல்வி கண்டால் கூட அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிடும். இந்த ஐபிஎல் சீசனின் பிளே ஆஃப் சுற்றுக்கு ஒரேயொரு இடம் எஞ்சியுள்ள ஒரேயொரு அந்த இடத்துக்காக 5 அணிகள் மோதவுள்ளது போட்டியில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியுள்ளது.