Published : 06 Jun 2015 08:22 PM
Last Updated : 06 Jun 2015 08:22 PM

பிரெஞ்ச் ஓபன்: போராடிய முர்ரேயை வீழ்த்திய ஜோகோவிச் வரலாறு படைப்பாரா?

பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரேயை 5 செட்களில் போராடி வீழ்த்திய செர்பிய நட்சத்திரமும் நம்பர் 1 வீரருமான ஜோகோவிச் இறுதிக்குள் நுழைந்துள்ளார்.

இறுதிப் போட்டியில் வாவ்ரிங்காவைச் சந்திக்கும் ஜோகோவிச் அவரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றால், 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்களையும் வென்ற 8-வது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்துவார்.

2012 மற்றும் 2014-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் இறுதிக்குள் நுழைந்த ஜோகோவிச் 9 முறை பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ரபேல் நடாலிடம் இருமுறையும் வீழ்ந்து வாய்ப்பை நழுவ விட்டார்.

இவருக்கு முன்னதாக 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற டென்னிஸ் நட்சத்திரங்கள்: பிரெட் பெரி, டான் பட்ஜ், ராட் லேவர், ராய் எமர்சன், ஆந்த்ரே அகாசி, ரோஜர் பெடரர், மற்றும் ரஃபேல் நடால் ஆவார்கள். இப்போது ஜோகோவிச் வென்றால் 8-வது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்துவார்.

இந்நிலையில் மிகவும் விறுவிறுப்பான முறையில், அபாரமான ஆட்டத்திறனுடன் நடைபெற்ற இந்த அரையிறுதிப் போட்டியில் கடைசியாக ஜோகோவிச் 6-3, 6-3, 5-7, 5-7, 6-1 என்ற செட்களில் முர்ரேயை வீழ்த்தினார்.

நேற்று முதல் 2 செட்கள் முடிந்து 3-வது செட்டில் பின் தங்கியிருந்த முர்ரே அதன் பின் திடீர் எழுச்சியுற்று 5-7 என்று அந்த செட்டைக் கைப்பற்ற ஆட்டம் 4-வது செட்டுக்குச் சென்றது அப்போது 3-3 என்ற நிலையில் சூறைக்காற்று காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு சனிக்கிழமையான இன்று நடைபெற்றது.

ஜோகோவிச் முழுதீவிரத்துடன் ஆட 3-3 என்ற சமநிலை ஜோகோவிச்சுக்கு சாதகமாக 5-4 என்று ஆனது. இந்தநிலையில் முர்ரேயின் கடின உழைப்பு வீண் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்தது வேறு.

சிலபல அபாரமான ஷாட்களை ஆடிய முர்ரே 5-5 என்று சமன் பெற்றார். பிறகு 6-5 என்று முன்னிலை பெற்றார். அதற்கு அவர் ஆடிய விதம் அபாரமானது. ஒரு புள்ளிக்காக இருவரும் 33 ஸ்ட்ரோக்குகளை ஆடினர். அயராத ரேலியில், அயராது பந்தை திருப்பி அடித்தல் என்று இருவரும் கடுமையாக போராடினர்.

ஆனால் கடைசியில் முர்ரே ஒரு அருமையான டிராப் ஷாட்டை ஆட, தடுமாறிய ஜோகோவிச் அதனை எடுத்தபோது பந்து வலையைத் தாக்கியது. 33 ஸ்ட்ரோக் முடிவில் முர்ரே டிராப் ஷாட்டினால் ஜோகோவிச்சுக்கு டென்ஷனாக முடிந்தது. அதன் பிறகு ஓடிய படியே ஒரு பேக் ஹேண்ட் பாசிங் ஷாட் அடித்தார் முர்ரே, ஜோகோவிச் அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு இரண்டு போர்ஹேண்ட் ஷாட்களில் தவறுகள் இழைக்க 4-வது செட்டையும் முர்ரே 7-5 என்று கைப்பற்றினார்.

ஆட்டம் பரபரப்பான 5-வது செட்டுக்குச் சென்றது. ஆனால் அங்குதான் ஜோகோவிச்சின் ஆக்ரோஷம் கலந்த சாதுரியமான நிதானத்தில் முர்ரே வீழ்ந்தார். தொடகக்த்திலேயே தவறுகள், தன் சர்வை இழந்தார் முர்ரே இதனால் ஜோகோவிச் 2-0 என்று முன்னிலை வகித்தார்.

பிறகும் சர்வ்களை இருமுறை முர்ரே இழக்க ஜோகோவிச் 5-1 என்று முன்னிலை பெற்று கடைசியில் ‘ஏஸ்’ சர்வ் மூலம் 6-1 என்று இறுதி செட்டைக் கைப்பற்றினார். முர்ரே தோல்வி, ஜோகோவிச் இறுதியில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x