

கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக நேற்று 47 பந்துகளில் 68 ரன்கள் விளாசி டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்ட மாயங்க் அகர்வால், விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று யுவராஜ் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
166 ரன்கள் இலக்கைத் துரத்திய டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் யுவராஜ் சிங், மாயங்க் அகர்வால் கூட்டணி 106 ரன்கள் விளாசியது.
ஐபிஎல் அதிகாரபூர்வ இணையதளத்தில் யுவராஜ் சிங் கூறியதாவது: "ஐபிஎல் தொடக்கத்திலிருந்தே நான் மாயங்க் அகர்வாலிடம் பேசி வந்துள்ளேன். அவர் சிறப்பாக ஆடி வருகிறார், நல்ல முதிர்ச்சி தெரிகிறது, விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார்" என்றார்.
கர்நாடகாவைச் சேர்ந்த மாயங்க் அகர்வால், யுவராஜ் சிங் போன்ற ஒருவருடன் இணைந்து ஆடும்போது ஏற்படும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“ஒவ்வொரு ஓவர் முடிவிலும் நானும் யுவராஜும் திட்டமிடுவோம். எந்த பவுலரை அடுத்து இலக்காக்குவது என்று இருவரும் கலந்தாலோசித்தோம்.
மேலும், நாங்கள் களத்தில் இறங்கும் போது விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால், இலக்கை வெற்றிகரமாக துரத்துவது பற்றிய பிரச்சினைகள் இல்லை. மிட்செல் ஜான்சன் பந்துவீச்சை உடனடியாக அடிக்கும் எண்ணம் இருவருக்கும் இல்லை, ஆனால் அவரது பந்துவீச்சை சிறிது ஆடி கணித்த பிறகு அடிக்கலாம் என்று முடிவெடுத்தோம்” என்றார் மாயங்க் அகர்வால்.
இவர் ஏற்கெனவே அதிரடி தொடக்க வீரர் சேவாக் போல் தனது ஆட்டத்தை வடிவமைத்துக் கொண்டதாக கூறியது இங்கு நினைவுகூரத் தக்கது.