கிறிஸ் கெயில் தனக்குத்தானே அழுத்தம் ஏற்படுத்திக் கொள்கிறார்: விராட் கோலி

கிறிஸ் கெயில் தனக்குத்தானே அழுத்தம் ஏற்படுத்திக் கொள்கிறார்: விராட் கோலி
Updated on
1 min read

டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கிறிஸ் கெயிலின் பிரச்சினைகள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் மிட்செல் ஸ்டார்க் (3/20) வருண் ஆரோன் (2/24), வெய்ஸ் (2/18) ஆகியோரது பந்துவீச்சுக்கு திக்கித் திணறி 18.2 ஓவர்களில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி 95 ரன்களுக்குச் சுருண்டது. ரூ.16 கோடி கொடுத்து வாங்கப்பட்ட யுவராஜ் சிங் 2 ரன்களில் வருண் ஆரோன் பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேதர் ஜாதவ் மட்டுமே அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணியில் கெயிலும், கேப்டன் கோலியும் தொடக்க வீரர்களாக களமிறங்கி 63 பந்துகளில் 99/0 என்று அபார வெற்றி பெறச் செய்தனர்.

கெயில் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 62 ரன்களை விளாச, விராட் கோலி அவருக்கு பக்கபலமாக 23 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

கெயில் இந்தத் தொடரில் முதன் முறையாக தனது பாணியில் விளையாடினார். இடையில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், விராட் கோலி கெயில் பற்றிக் கூறும்போது, “கெயில் மிகவும் சுதந்திரமாக ஆட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர் தன் மீதே நிறைய அழுத்தம் கொடுத்துக் கொள்கிறார்.

கடந்த ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடினார் கெயில். அவர் ஒவ்வொரு முறையும் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்று உணர்கிறார், இதனால் அணியும் அவரிடம் இதனை எதிர்பார்ப்பதாக அழுத்தம் ஏற்படுத்திக் கொள்கிறார். இதனால் அவருக்கு அழுத்தம் கூடுகிறது. இத்தகைய நெருக்கடி எந்த ஒரு வீரருக்கும் நியாயமாகாது” என்றார் விராட் கோலி.

விருத்திமான் சஹாவை பாராட்டும் விராட் கோலி...

இந்திய அணிக்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும் தோனி செய்த பங்களிப்பை நாம் பாராட்ட வேண்டும். அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்வது கடினம். ஆனாலும் தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல், சஹா, சஞ்சு சாம்சன் போன்ற இளம் விக்கெட் கீப்பிங் திறமைகள் நம்மிடம் உள்ளன.

விருத்திமான் சஹா இந்திய அணியில் சிலகாலமாக இடம்பெற்று வருகிறார். தோனி இல்லாத போது அவர்தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். சஹா ஒரு உலகத் தரம் வாய்ந்த விக்கெட் கீப்பர், தனது பேட்டிங்கை மேம்படுத்துவதிலும் கடினமாக உழைத்து வருகிறார். அவருக்கு வயது 30 ஆகிறது. உடற்தகுதியும் கச்சிதமாக உள்ளது. அவர் இந்திய டெஸ்ட் அணியின் கீப்பராக 5-6 ஆண்டுகள் நீடிக்க முடியும் என்றே நான் கருதுகிறேன்.” என்றார் விராட் கோலி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in