

இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம்பெறாததற்குக் காரணம் கேப்டன் தோனியே என்று ஏற்கெனவே கடுமையாகப் பேசி சர்ச்சையைக் கிளப்பிய யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங், மீண்டும் தோனி மீது பாய்ந்துள்ளார்.
இந்தி செய்தி சானல் ஒன்றிற்கு பேட்டி அளித்த யோக்ராஜ் சிங், “தோனி ஒன்றுமில்லாதவர், அவர் ஒன்றுமேயில்லை. ஊடகங்களினால் அவர் கிரிக்கெட் கடவுள் ஆகியிருக்கிறார். ஊடகங்கள் அவரை மிகப்பெரிய வீரர் என்று ஊதிப் பெருக்கியது, ஆனால் இத்தகைய பெருமைக்கு அவர் தகுதியானவர் அல்ல.
அவர் ஒன்றுமே இல்லாத காலங்கள் இருந்தன, ஆனால் இன்று ஊடகங்களின் முன்னால் அமர்ந்து ஊடக நிருபர்களையே கேலியும் கிண்டலும் செய்கிறார். அவருக்கு துதிபாடிய ஒரு பத்திரிகையாளரையே கேலி செய்கிறார். அவர் ஒரு ரன் எடுத்தால் கைதட்டும் இந்திய ரசிகர்களை எகத்தாளம் செய்கிறார். உண்மையாகக் கூறினால் நான் நிருபராக இருந்திருந்தால் அந்த இடத்திலேயே தோனியை அடித்திருப்பேன்.
தோனியின் கர்வம் தலைக்கேறியுள்ளது. ராவணனின் கர்வம் ஒருநாள் முடிவுக்கு வந்தது போல் இவரது கர்வமும் முடிவுக்கு வரும். இவர் தன்னை ராவணனுக்கும் மேலாக நினைத்துக் கொண்டுள்ளார். மற்ற கிரிக்கெட் வீரர்கள் தோனியைப் பற்றி என்னிடம் வந்து கூறும்போது எனக்கு அவமானமாக உள்ளது. நான் கூட முன்பு நினைத்தேன், தோனியைக் குறை கூறுபவர்கள் அவர் மீதுள்ள பொறாமை காரணமாக இப்படிக் கூறுகின்றனர் என்று. ஆனால் மற்ற கிரிக்கெட் வீரர்கள் தோனியைப் பற்றி கூறுவதைப் பார்க்கும் போது அவர் எப்படிப்பட்டவர் என்று புரிகிறது.
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யுவராஜ் களமிறங்கத் தயாராக இருந்தார். ஆனால், தோனி அவரை நிறுத்திவிட்டு, தான் இறங்கி பெரிய ஹீரோவானார். அப்போது ஏன் முன் கூட்டியே அவர் களமிறங்க வேண்டும்? அவர் தன்னை ஒரு பெரிய வீரராக நினைத்திருந்தால் ஏன் இம்முறை 4ஆம் நிலையில் களமிறங்கவில்லை? ஏன் 6-ம் நிலையில் களமிறங்கி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெறச் செய்ய முடியவில்லை?" என்றார் யோக்ராஜ் சிங்.
முதல் முறை தோனியின் மீது யோக்ராஜ் சிங் தாக்குதல் தொடுத்த போது யுவராஜ் சிங் தனது ட்விட்டரில் அதற்கு விளக்கம் அளித்து, ஒரு தந்தையின் புலம்பல் என்ற அளவில் முடித்திருந்தார். மேலும், தனது தந்தை உணர்ச்சி வசப்படுகிறார் என்று கூறியதோடு, தான் தோனியுடன் சேர்ந்து விளையாடுவதை எதிர்நோக்குவதாகவும் யுவராஜ் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.