

சென்னை: எதிர்வரும் 2026 ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் மொத்தம் 350 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 240 இந்திய வீரர்களும் அடங்கும். வரும் 16-ம் தேதி அபுதாபியில் ஏலம் நடைபெறுகிறது.
இந்த மினி ஏலத்தை முன்னிட்டு 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியின் தக்கவைத்துள்ள வீரர்களின் விவரத்தை ஏற்கெனவே வெளியிட்டுவிட்டது. சில அணிகள் டிரேடிங் முறையிலான வீரர்களை மாற்றிக்கொண்டன. இதில் சிஎஸ்கே அணியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜடேஜாவும், ராஜஸ்தான் அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சனும் மாற்றப்பட்டனர். இது போல வேறு சில அணிகளும் டிரேடிங் முறையில் வீரர்களை பெற்றுள்ளன.
இந்த ஏலத்தில் மொத்தம் 1,390 வீரர்கள் பதிவு செய்தனர். பின்னர் இந்த பட்டியல் 1,055 என ஆனது. இறுதியில் 350 வீரர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஏலத்தில் மொத்தமாக 77 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளனர். இவர்களில் 31 பேர் வெளிநாட்டு வீரர்கள். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களில் 224 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடாதவர்கள்.
350 வீரர்களில் 40 பேர் தங்களது அடிப்படையை விலையை ரூ.2 கோடி என அறிவித்துள்ளனர். 227 பேர் ரூ.30 லட்சம் என்ற அடிப்படை விலையில் பதிவு செய்துள்ளனர். பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், விக்கெட் கீப்பர், வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் என பிரிவு வாரியாக வீரர்கள் ஏலத்தில் அறிவிக்கப்பட உள்ளனர்.