

உலகக் கோப்பையில் அதிவேக அரை சதமடித்தவர் என்ற தனது பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார், நியூஸிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் மெக்கல்லம்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது நியூஸிலாந்து.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, டிம் சவுதியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தது. இதனால் அந்த அணி 33.2 ஓவர்களில் 123 ரன்களுக்கு சுருண்டது. சவுதி 33 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் கேப்டன் மெக்கல்லம், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 25 பந்துகளில் 7 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் குவிக்க, அந்த அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
இந்த ஆட்டத்தில் 18 பந்துகளில் அரைசதத்தை எட்டினார் மெக்கல்லம். இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிவேக அரை சதமடித்தவர் என்ற தனது பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன்னர் 2007 உலகக் கோப்பையில் கனடாவுக்கு எதிராக மெக்கல்லம் 20 பந்துகளில் அரைசதம் கண்டதே சாதனையாக இருந்தது.
இதுதவிர ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக அரைசதமடித்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார் மெக்கல்லம். டிவில்லியர்ஸ் (16 பந்துகள், தென் ஆப்பிரிக்கா), ஜெயசூர்யா (17 பந்துகள், இலங்கை) ஆகியோர் முறையே முதல் இரு இடங்களில் உள்ளனர்.
இங்கிலாந்து - நியூஸி. போட்டியின் முக்கியத் துளிகள்:
* இங்கிலாந்துக்கு எதிராக 33 ரன்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பையில் 3-வது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார் டிம் சவுதி. கிளன் மெக்ராத் (7/33), ஆன்டி பிக்கேல் (7/20) ஆகியோர் முறையே முதல் இரு இடங்களில் உள்ளனர்.
* 9 ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வீழ்த்திய முதல் நியூஸிலாந்து வீரர் என்ற பெருமை டிம் சவுதிக்கு கிடைத்துள்ளது. ஒருநாள் போட்டியில் ஒரு பவுலர் 7 விக்கெட் எடுப்பது 9-வது முறையாகும்.
* 6.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியதன் மூலம் கடந்த 14 ஆண்டுகளில் அதிவேகமாக 100 ரன்களை எட்டிய அணி என்ற பெருமை நியூஸிலாந்துக்கு கிடைத்துள்ளது.
* 12.2 ஓவர்களில் 124 ரன்கள் என்ற இலக்கை எட்டியதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக இலக்கை (100 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கு) எட்டிய அணிகள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது நியூஸிலாந்து. முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. அந்த அணி வங்கதேசத்துக்கு எதிராக 109 ரன்கள் என்ற இலக்கை 12 ஓவர்களில் எட்டியுள்ளது.
* நியூஸிலாந்துக்கு எதிராக இரு ஓவர்களை வீசிய ஸ்டீவன் ஃபின் 49 ரன்களை வாரி வழங்கினார்.
* இந்த ஆட்டத்தில் மெக்கல்லம் 3 ஒரு ரன்களை (சிங்கிள்) மட்டுமே எடுத்தார். எஞ்சிய 74 ரன்களும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் மூலம் கிடைத்தன.