2 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து முதல் ஓவரிலேயே 3 விக்கெட்: அசத்திய ஆலி ராபின்சன்

2 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து முதல் ஓவரிலேயே 3 விக்கெட்: அசத்திய ஆலி ராபின்சன்
Updated on
2 min read

மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் திங்க் டேங்கினால் ‘அவர் அதுக்கெல்லாம் சரிப் படமாட்டார்’ என்று ஒதுக்கித் தள்ளப்பட்ட ஆலி ராபின்சன் மீண்டும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், நியூஸிலாந்து இன்னிங்சின் தன் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மெய்டனாகவும் வீசி அசத்தினார். இவரையா ஒழித்தோம் என்று மெக்கல்லம் பெவிலியனில் தாடியச் சொறிந்தபடி அமர்ந்திருந்தார்.

டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் டாம் லேதம் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். நியூசிலாந்துக்கு பெரும் நிம்மதியளிக்கும் வகையில் வானம் முழுவதும் மேகமூட்டமாக மாறியதால், இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் 140 ரன்களுக்கு ஆல் அவுட் என்று முடிந்தது. ஆனால் நியூஸிலாந்தும் தன் பங்குக்குச் சொதப்பி 29/6 என்று ஆகி கடைசியில் ஆட்ட முடிவில் 61/6 என்று கடுமையாகத் திணறி வருகிறது.

பந்துவீச்சாளர்கள் கொண்டாடும் நாளாக இது அமைந்தது. மெதுவாகவும், தாழ்வாக பந்து வரும் தன்மையுடனும் இருந்த ஆடுகளம், அதனுடன் அடர்ந்த மேகமூட்டம் மற்றும் மழையால் ஏற்பட்ட இடையூறுகள் ஆகியவை சேர்ந்து விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழ வழிவகுத்தன.

முதலில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. கைல் ஜேமிசன் தனது அபாரமான 5 விக்கெட் சாதனையின் மூலம் இங்கிலாந்தை வெறும் 140 ரன்களுக்கு சுருட்டி வீசினார்.

ஆனால் அதற்கு பதிலடியாக இங்கிலாந்தும் சிறப்பாக செயல்பட்டது. நியூசிலாந்தை 29/6 என்ற மோசமான நிலைக்கு தள்ளியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணிக்குத் திரும்பிய ஆலி ராபின்சன் தனது முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அசத்தலான ‘டிரிபிள்-விக்கெட் மெய்டன்’ சாதனை ஓவரை பதிவு செய்தார்.

தற்போது நியூசிலாந்தின் நம்பிக்கை முழுவதும் கிளென் பிலிப்ஸ் மீது உள்ளது. அணியை இங்கிலாந்தின் ஸ்கோருக்கு சமமாக கொண்டு செல்லும் பொறுப்பு அவர்மீதே உள்ளது. எனினும், அதற்காக அவர்கள் இரண்டாம் நாளில் இன்னும் கடினமாக போராட வேண்டியுள்ளது.

இங்கிலாந்து மேலும் மோசமாகப் போயிருக்கும். ஏனெனில் அரைசதம் கண்ட ஹாரி புரூக் 8 இல் இருந்த போது டெவன் கான்வே கொஞ்சம் கடினமான கேட்சை விட்டார், பிற்பாடு ரச்சின் ரவீந்திரா கையில் வந்த கேட்சை விட்டார். இதில் ஒரு கேட்சை முதலில் எடுத்திருந்தால் இங்கிலாந்தும் 100 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.

ஆலி ராபின்சனின் முதல் ஓவர்தான் பேசுபொருளாகியுள்ளது. முதலில் டெவன் கான்வே உள்ளே வந்தப் பந்தை காலில் வாங்கி எல்.பி.ஆனார். அதே இன்ஸ்விங்கரில் கேன் வில்லியம்சன் இன்சைடு எட்ஜில் ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனார். ரச்சின் ரவீந்திரா சோம்பேறித்தனமாக ஆடியதால் எல்.பி.ஆக இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஓவரிலேயே ரன் கொடுக்காமல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஆலி ராபின்சன்.

உலகத் தரமான பந்து வீச்சுக்கு காட்டு வேகம் தேவையில்லை ஹை ரிலீஸ் பாயிண்ட், கடுமையான துல்லியம் இருந்தாலே போதும், கொஞ்சம் ஸ்விங், கொஞ்சம் வேகம் இருப்பதே நல்லது என்பதை ஆலி ராபின்சன் நிரூபித்தார். மேலும் இங்கிலாந்தின் டார்மெண்ட்டர் என்று அழைக்கப்படும் டேரில் மிட்செல் உள்ளே வரும்பந்தை படு மோசமாக ஆடாமல் விட்டு பவுல்டு ஆக ஆலி ராபின்சன் 6 ஓவர் 3 மெய்டன் 10 ரன்கள் 4 விக்கெட்டுகள் என்று அசத்தினார்.

முன்னதாக இங்கிலாந்து 31/1 என்ற நிலையிலிருந்து 34/4 என்று சரிவு கண்டது, ரூர்கே, மற்றும் நேதன் ஸ்மித் பிரேக் கொடுக்க, கைலி ஜேமிசன் 5 விக்கெட்டுகளைச் சாய்க்க இங்கிலாந்து 140 ரன்களுக்குச் சுருண்டது. குறிப்பாக 34/4 லிருந்து ஜேமி ஸ்மித் மிக மோசமாக ஒரு நேர் பந்தை ஆடாமல் விட்டு பவுல்டு ஆனது காமெடியானது. அதன் பிறகே ஹாரி புரூக் அரைசதம் இல்லையெனில் இங்கிலாந்து 100 ரன்களுக்குள் மடிந்திருக்கும் என்றே கூற வேண்டும்.

மொத்தத்தில் பிட்சில் பெரிய உதவி இல்லை. கைலி ஜேமிசன் மற்றும் நியூஸிலாந்தின் துல்லிய பவுலிங் பிறகு ஆலி ராபின்சனின் சென்சேஷனல் ஸ்பெல் ஆகியவற்றால் லார்ட்ஸ் டெஸ்ட் சுவாரஸ்யம் மிக்கதானது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து முதல் ஓவரிலேயே 3 விக்கெட்: அசத்திய ஆலி ராபின்சன்
குரூப் ‘சி’ - பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து அணிகள் எப்படி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in