

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து பாலோ-ஆனை தவிர்க்க போராடி வருகிறது.
கொழும்பு நகரில் உள்ள சிங்களீஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தில் 138 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 503 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸைடிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 117, துருவ் ஜூரெல் 115, ரிஷப் பந்த் 63 ஷுப்மன் கில் 50 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து விளையாடிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்தது. லகிரு குமாரா 1, பிரபாத் ஜெயசூரியா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். கமில் மிஷாரா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது. கமில் மிஷாராவுடன் பசிந்து சூரியபண்டாரா களமிறங்கினார்.
கமில் மிஷாரா 25 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 35 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபண்டாராவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார். 4-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை பிரசித் கிருஷ்ணா பிரித்தார்.
கமிந்து மெண்டிஸ் 58 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் மிட்விக்கெட் திசையில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 14 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 8 ரன்கள் எடுத்த நிலையில் மானவ் சுதார் சுழலில், சிலிப் திசையில் நின்ற கே.எல்.ராகுலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் சோனல் தினுஷா களமிறங்கினார். தனது முதல் அரை சதத்தை கடந்த பசிந்து சூரியபண்டாரா 133 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் விளாசிய நிலையில் ஜடேஜா பந்தில் போல்டானார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்லா ரன் ஏதும் எடுக்காத நிலையில் முகமது சிராஜ் பந்தில், துருவ் ஜூரெலிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேஷரா நுவந்தா தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த சோனல் தினுஷா மட்டையை சுழற்றினார். சோனல் தினுஷா 82 பந்துகளில், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் தனது 3-வது அரை சதத்தை கடந்தார்.
நிதானமாக விளையாடிய கேஷரா நுவந்தா 74 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் மானவ் சுதார் பந்தில் மிட் ஆஃப் திசையில் நின்ற சரண்ஷ் ஜெயினிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி 83.4 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் 3-வது நாள் ஆட்டம் அத்துடன் முடித்துக்கொள்ளப்பட்டது. சோனல் தினுஷா 136 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 85 ரன்களும், லகிரு குமாரா 50 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 8 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 65 நிமிடங்களை செலவிட்டு 50 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 238 ரன்கள் பின்தங்கி உள்ள இலங்கை அணி பாலோ-ஆனை தவிர்க்க மேற்கொண்டு 38 ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.