

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையிடம் இந்தியா தோல்வி கண்டது. இறுதிப் போட்டிவரை எந்த ஆட்டத்திலும் தோற்காத இந்தியா, கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தியா தோற்றதற்கு முக்கியக் காரணமாக பல ரசிகர்கள் யுவராஜ் சிங்கின் மோசமான ஆட்டத்தை காரணம் காட்டினர்.
ஆட்டம் முடிந்த நொடியிலிருந்து யுவராஜுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வசை மொழிப் பதிவுகளும், நையாண்டிச் சித்திரங்களும் பதிவேற்றப்பட்டன.
இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சச்சின் டெண்டுல்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் யுவராஜுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அதில் உள்ள வரிகள் பின்வருமாறு:
"அடுத்த நொடியை கணிக்க இயலாத தன்மையே கிரிக்கெட்டை ஒரு பரபரப்பான விளையாட்டாக ஆக்குகிறது. நாங்கள் சிறப்பாக செயல்படும்போது வரும் ரசிகர்களின் கைதட்டலை கிரிக்கெட் வீரர்களாக மகிழ்கிறோம். ஆனால், அதைவிட நாங்கள் கஷ்டப்படும்போது ரசிகர்கள் தரும் ஆதரவையும் உற்சாகத்தையுமே அதிகம் மெச்சுகிறோம்.
யுவி, 2007-ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் படைத்த சாதனையிலும், 2011-ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையின் வெற்றியில் அவரது பங்கிலும் நாம் அனைவரும் பெருமையடைந்தோம்.
யுவிக்கு நேற்று கடினமான ஒரு தினமாக அமைந்தது. அதற்கு அவரை விமர்சிக்கலாம். ஆனால், அதற்காக அவரை சிலுவையில் ஏற்றவோ, திறைமயற்றவராக நினைத்தலோ கூடாது. கிரிக்கெட் விளையாட்டிலும், விளையாட்டைத் தாண்டியும் பல தடைகளைத் தாண்டி வந்துள்ள யுவியின் மன தைரியத்தைக் கண்டு நான் வியந்துள்ளேன்.
மீண்டும் கண்டிப்பாக இந்தத் தடைகளை எதிர்த்துப் போராடி, தன் மீதுள்ள விமர்சனங்களை பொய்யாக்கும் வலிமையும் திறனும் யுவிக்கு உள்ளது என்பதை நான் அறிவேன்.
யுவி, பல இனிமையான நினைவுகளில் உங்களின் பங்கை, ஒரு கசப்பான தினம் குறைத்துவிட முடியாது. நீங்கள் இன்று சரிவை சந்தித்திருக்கலாம். ஆனால், வீழ்ச்சி என்பது உங்களுக்கு வெகு தூரம்."
இவ்வாறு சச்சின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.