

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி மும்பையில் இன்று தேர்வு செய்யப்படுகிறது. தேர்வுக் குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையிலான குழுவினர் மதியம் 1 மணிக்கு கூடி அணியைத் தேர்வு செய்ய வுள்ளதாக பிசிசிஐ செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்துள்ளார்.
கடந்த உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடி இப்போது ஃபார்மில் இல்லாமல் இருக்கும் யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் உத்தேச அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த உலகக் கோப்பையில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கி தொடர்நாயகன் விருதை வென்ற யுவராஜ் சிங், பார்மில் இல்லாததால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. விஜய் ஹசாரே டிராபியில் ஒரேயொரு அரைசதமடித்த யுவராஜ் சிங், தியோதர் டிராபியில் கிடைத்த ஒரு வாய்ப்பையும் கோட்டைவிட்டார். இதேபோல் சேவாக், கடந்த உலகக் கோப்பையில் அசத்தியிருந்தாலும் இப்போது அணியில் இல்லை.
அதேநேரத்தில் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் சிறப்பாக ஆடக்கூடியவர் சேவாக். சமீபத்தில் நடைபெற்ற வடக்கு மண்டல ஒருநாள் போட்டி லீக்கில் ஹரியாணாவுக்கு எதிராக 80 ரன்கள் குவித்தார் சேவாக். அவருடைய கடந்த கால சாதனைகளை வைத்துப் பார்க்கும்போது அவரை சாதாரணமாக நினைக்க முடியாது. அவர் அடிக்கமாட்டார் என நினைக்கிறபோது அதை பொய்யாக்கி வெளுத்து வாங்கி விடுவார். உலகக் கோப்பையில் விளையாட ஆர்வமாக இருப்ப தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த உலகக் கோப்பையின் இறுதியாட்டத்தில் இக்கட்டான நேரத்தில் 97 ரன்கள் குவித்த கவுதம் கம்பீர், தற்போது அணியில் இல்லாவிட்டாலும் அவர் ஓரளவு பார்மில் இருப்பதால் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.
இதேபோல் ஹர்பஜன் சிங், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரும் இடம்பெற வாய்ப்புள்ளது. இலங்கைக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் விளை யாடிய 14 பேரும், அதில் ஓய்வளிக் கப்பட்ட தோனி, இஷாந்த் சர்மா, வருண் ஆரோன், முகமது சமி, புவனேஸ்வர் குமார், ஷிகர் தவன், ஜடேஜா ஆகியோரும் இடம்பெற வாய்ப்புள்ளது.
தியோதர் டிராபி அரையிறுதியில் 151 ரன்கள் விளாசிய மனோஜ் திவாரி, மும்பை ரஞ்சி அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் மணீஷ் பாண்டே, மயங்க் அகர்வால், சவுராசிஷ் லஹிரி, பாபா அபராஜித் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.