

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தில் பாதியிலேயே காயம் காரணமாக மைக்கேல் கிளார்க் வெளியேறினார். அவரது காயம் அவர் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதனால், அவர் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். நடுவில் மருத்துவமனைக்கு ஸ்கேனிற்காகச் சென்று திரும்பிய கிளார்க் பெவிலியனில் அமர்ந்து ஆஸ்திரேலிய வெற்றியையும், விராட் கோலி, முரளி விஜய்யின் அபார பேட்டிங்கையும் பார்த்து மகிழ்ந்தார்.
"ஸ்கேன்களை நிபுணர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். எத்தனை நாட்களுக்கு நான் விளையாட முடியாது என்பது உறுதியாகத் தெரியவில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் பயிற்சி ஆட்டத்திற்கு இன்னும் 8 வாரங்கள் உள்ளன. அதற்கு முன்பு முத்தரப்பு போட்டியில் விளையாட விரும்புகிறேன், உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறேன். ஆனால், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உலகக் கோப்பையில் விளையாடலாம், விளையாட முடியாமல் போகலாம், ஏன் இனி என்னால் கிரிக்கெட் விளையாட முடியாமலேயே கூட போகலாம். அப்படி விட்டுவிட மாட்டேன், ஆனாலும் நான் எதார்த்தமாக பேச வேண்டுமல்லவா?
இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடியதற்காக எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை. காயத்தால் வெளியேறிய பிறகு மீண்டும் வந்து ஆடியது பற்றியும் எனக்கு வருத்தமில்லை.
நான் மருத்துவ நிபுணர்களை நம்பியிருக்கிறேன், இந்த கோடைகால கிரிக்கெட் தொடரில் மீண்டும் விளையாடுவேன் என்று அவர்களை வைத்து என்னால் நம்பிக்கை கொள்ள முடிகிறது” என்றார் கிளார்க்.
அவருக்குப் பதிலாக பிரிஸ்பன் டெஸ்ட் போட்டிக்கு ஷான் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார். மிட்செல் ஸ்டார்க்கும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.