வணிக நலன்கள் கொண்ட வீரர்கள், நிர்வாகிகள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்

வணிக நலன்கள் கொண்ட வீரர்கள், நிர்வாகிகள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்
Updated on
2 min read

ஐபிஎல் கிரிக்கெட்டில் வணிக நலன்கள் கொண்ட வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் பெயர்களை பிசிசிஐ, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, சவுரவ் கங்குலி, ஸ்ரீகாந்த், தோனி, அனில் கும்ளே, வெங்கடேஷ் பிரசாத், லால்சந்த் ராஜ்புட் உள்ளிட்ட வீரர்கள் பெயர்களும் சில நிர்வாகிகள் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலைக் கணக்கில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், "ஐபிஎல் அல்லது வேறு எந்த கிரிக்கெட்டிலோ வணிக நலன்கள் உள்ளவர்கள் நிர்வாகத்தில் இருக்கக் கூடாது” என்று கூறியது.

பிசிசிஐ-க்காக வாதாடிய சி.ஏ.சுந்தரம் என்ற வழக்கறிஞர், ஏதோ ஒரு விதத்தில் வணிக நலன்கள் இவர்களுக்கு இருக்கிறது என்றார்.

“இவர்களில் சிலர் வர்ணனையாளர்களாக இருக்கிறார்கள். கும்ளே, ஸ்ரீகாந்து போன்றவர்கள் முறையே மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு பயிற்சி மட்டத்தில் இருக்கின்றனர்” என்றார் சுந்தரம்.

இதற்கு நீதிமன்றம், “இவர்களை 6.2.4 விதிமுறைகளிலிருந்து இதுவரை நீக்கி வைத்திருந்தீர்கள். அது குறித்து நாங்கள் எதையும் டீல் செய்ய விரும்பவில்லை. நாம் டெஸ்ட் போட்டிகளை எடுத்துக் கொள்வோம். 7ஆம் எண்ணில் குறிப்படப்பட்ட பெயரில் உள்ளவர் (ஸ்ரீகாந்த்) ஐபிஎல் அணியிலும் பணியாற்றினார், தேசிய அணியின் தேர்வுக்குழுவிலும் இருந்துள்ளார்.

அவரை எப்படி அணித் தேர்வுக்குழுவில் வைத்திருந்தீர்கள்? இதனை எப்படி நியாயப்படுத்த முடியும்? அவர் (ஸ்ரீகாந்த்) ஐபிஎல் கிரிக்கெட்டில் அவருக்கு ஏற்கெனவே பங்கு இருக்கும் போது அவரை எப்படி இந்திய அணித் தேர்வுக்குழுவிலும் வைத்திருந்தீர்கள்?” என்று கேட்டது.

அதற்கு பிசிசிஐ வழக்கறிஞர், இவையெல்லாம் முரண்பட்ட இரட்டை நலன்களாக வாய்ப்புள்ளதே தவிர அவ்வாறான வணிக நலன்கள் மட்டுமே என்பதாக நாம் பார்க்கத் தொடங்கினால் கஷ்டம்தான் என்றார். உதாரணத்திற்கு தோனியை எடுத்துக் கொண்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி புரொமோட் செய்கிறார். அவர் இந்திய அணியின் கேப்டன், மேலும் அணியின் தேர்விலும் முக்கியப் பங்கு வகிக்கிறார். இப்படியிருக்கும்போது முரண்பட்ட இரட்டை நலம் என்று அனைத்தையும் டீல் செய்தால் கடினம்தான் என்றார் சுந்தரம் மேலும்.

இதற்கு நீதிமன்றம் கூறும்போது, ஒரு நிர்ணையிக்கப்பட்ட வருவாய்க்காக வர்ணனையாளர்களாக பணியாற்றுபவர்களால் ஆட்டத்தின் முடிவு மாறிவிடப்போவதில்லை. மாறாக ஏலத்தில் தன்னை முன்னிறுத்துபவர்களை இவர்களுடன் ஒப்பிட முடியாது அல்லவா? வர்ணனையாளர் போன்றவர்கள் ஆட்டத்தின் முடிவு மீது எந்த வித தாக்கமும் இல்லை என்றது.

உடனே சீனிவாசனின் வழக்கறிஞர் கபில் சிபல், “பிசிசிஐ தலைவராக இருப்பதும் அணி ஒன்றை நிர்வகித்து நடத்துவதும் முரண்பட்ட வணிக நலன்கள் என்றால் எனக்கு எதிராக உத்தரவு பிறப்பித்து விடுங்கள். முரண்பட்ட இரட்டை நலம் என்பது ஒரு கொள்கை விஷயமாக இருக்க முடியாதது, அது சமரசமற்றதாக இருக்க வேண்டும் என்றார் கபில் சிபல். இந்த இரட்டை நலம் எங்கும் இருந்து வருகிறது, நீதித்துறையிலும் இருக்கிறது” என்றார் சிபல்.’’

அதற்கு நீதிபதிகள், “பிசிசிஐ தலைவராக உங்கள் அணிக்கு நீங்கள் எப்படி ரூ.16 கோடியை அளிக்க முடியும், பிற அணிகளும் தொகையைப் பெற்றுள்ளன என்பதை மறுக்கவில்லை...நீங்கள் பின்னால் பணத்தை திருப்பி கொடுத்து விட்டீர்கள் என்பது உங்கள் செயல்பாடுகளை குறைத்து விடாது” என்றனர்.

அதற்கு கபில் சிபல், “பிசிசிஐ எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை என்பதல்ல விஷயம், சில குறைபாடுகள் உள்ளன அதனை சரி செய்ய முடியும் என்பதே. ஆட்ட நிர்ணயமும் சூதாட்டமும் 6.2.4 விதிமுறையுடன் தொடர்பில்லாதது. 90களிலிருந்தே ஆட்ட நிர்ணய சூதாட்டம் இருந்து வருகிறது.

ஆகவே, முரண்பட்ட இரட்டை நலம் என்றால் அதனை ஒவ்வொரு சந்தர்ப்பமாக பிரித்துப் பார்க்க வேண்டும். ஒரு பதவிக்காக போட்டியிடுவதும், பதவியில் இருப்பதும் சட்ட உரிமைகள், இதனை சட்டத்தினால் மட்டுமே திரும்பப் பெற முடியும்.

பிரச்சினை என்னவெனில் நாம் முரண்பட்ட இரட்டை நலம் என்பதை பொதுக் கொள்கையுடன் ஒப்பிட்டு குழப்பிக் கொள்கிறோம். அறக்குழு அவ்வாறான இரட்டை பந்தம் இருப்பதைக் கண்டால் என்னை நடவடிக்கைகளிலிருந்து விலகுமாறு கோரலாமே,

எல்லோருக்கும் தெரியும் நான்(சீனிவாசன்) ஒரு அணியின் உரிமையாளர் என்று. அப்போதைய தலைவர் ஷரத் பவாரிடம் அனுமதி பெற்றுள்ளேன் என்பதும் தெரியும். சென்னை சூப்பர் கிங்ஸ் இதனால் பலனடைந்தது என்று ஒருவரும் கூறவில்லையே. நிதிசார்ந்த நலன்கள் இருக்கிறது என்பது முரண்பட்ட இரட்டை நலன் ஆகாது” என்று சிபல் விளக்கமளித்தார்.

உச்ச நீதிமன்றம் ஐபிஎல் வழக்கு குறித்த உத்தரவை தள்ளி வைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in