

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் போட்டி கிங்ஸ்டனில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை வெல்லும். கடந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் மோசமான திறனை வெளிப்படுத்திய இந்திய அணி அதில் இருந்து மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் மழையால் ரத்து ஆன நிலையில் அடுத்த இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் ஆன்டிகுவாவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மந்தமான ஆடுகளத்தில் 190 ரன்கள் இலக்கை எட்டிப் பிடிக்க முடியாமல் இந்திய அணி ஏமாற்றம் அளித்தது. முன்னாள் கேப்டனான தோனி மந்தமாக விளையாடி 114 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து கடும் விமர்சனத்தை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் அவர் 70 பந்துகளை ரன் சேர்க்காமல் வீணடித்திருந்தார்.
ஆட்டத்தின் கடைசி பகுதியில் பெரிய அளவிலான ஷாட் விளையாட முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்திருந்தார். இதனால் போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் தோனியின் திறன் மீது மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. தன் மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு இன்றைய ஆட்டத்தில் தோனி பதிலடி கொடுக்க முயற்சிக்கக் கூடும்.
இதேபோல் ரவீந்திர ஜடேஜாவும் கடைசி ஆட்டத்தில் நம்பிக்கையுடன் செயல்படத் தவறினார். முதல் 3 ஆட்டங்களிலும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் களமிறங்கிய அவர், பேட்டிங்கில் நெருக்கடியான கட்டத்தில் நிதானமாக செயல்படாமல் மோசமான ஷாட்டை விளையாடி பின்னடைவை ஏற்படுத்தினார்.
தொடக்க வீரரான அஜிங்க்ய ரஹானே இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒரு சதம், 3 அரை சதம் உட்பட 297 ரன்கள் சேர்த்துள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவண் 2 அரை சதங்கள் அடித்த போதிலும் கடந்த இரு ஆட்டங்களிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் பொறுப்புடன் விளையாடும் பட்சத்தில் அணியின் பேட்டிங் திறன் அதிகரிக்கும். யுவராஜ் சிங், தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் மீண்டும் களமிறங்கக்கூடும். இதனால் தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவார். கேப்டன் விராட் கோலி ஷாட்பிட்ச் பந்துகளில் கடந்த இரு ஆட்டங்களிலும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் அவர் கவனமுடன் விளையாடக்கூடும்.
பந்து வீச்சில் முகமது ஷமி, ஜடேஜா ஆகியோருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார், அஸ்வின் களமிறக்கப்படக்கூடும். இந்த தொடரில் 8 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள குல்தீப் யாதவ் மீண்டும் நெருக்கடி கொடுக்க முயற்சிப்பார்.
கடந்த ஆட்டத்தில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் வெற்றி பெற்றாலும் அது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த வெற்றியால் அந்த அணி தொடரை இழப்பதில் இருந்து தப்பித்தது. மீண்டும் ஒரு முறை மேற்கிந்தியத் தீவுகள் அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தும் பட்சத்தில் தொடரை 2-2 என சமனில் முடிக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் அது அவ்வளவு எளிதாக நடைபெறுமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் வலுவில்லாத அணிக்கு எதிராக தோல்வியடைந்த இந்திய அணி வெகுண்டெழுந்து பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் கடுமையாக போராட வேண்டியதிருக்கும்.
பேட்டிங்கில் கடந்த ஆட்டத்தில் தொடக்க வீரர்களான எவின் லீவிஸ், கைல் ஹோப் நிதானமான தொடக்கம் கொடுத்தனர். பெரிய அளவில் இவர்கள் ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் 17 ஓவர்கள் வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் பாதுகாத்தனர். இதனால் இந்த ஜோடியிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்பட வாய்ப்புள்ளது.
பந்து வீச்சில் கடந்த ஆட்டத்தில் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்கள் கைப்பற்றி சிறந்த திறனை வெளிப்படுத்தியிருந்தார். தேவேந்திர பிஷூ, கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் ரன் குவிப்பை கட்டுப்படுத்துபவர்களாக இருப்பது பலம் சேர்ப்பதாக உள்ளது. இவர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளனர்.
அணிகள் விவரம்