சுனில் நரேனை களமிறக்கியது ஏன்? - கவுதம் காம்பீர் விளக்கம்

சுனில் நரேனை களமிறக்கியது ஏன்? - கவுதம் காம்பீர் விளக்கம்
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் நேற்றுமுன்தினம் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல் கத்தா நைட்ரைடர்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது.

டேவிட் மில்லர் 28, மனன் வோரா 28, ஹசிம் ஆம்லா 25, மேக்ஸ்வெல் 25, விருத்திமான் சாஹா 25 ரன்கள் எடுத்தனர். உமேஷ் யாதவ் 4 விக்கெட்கள் கைப்பற்றினார். அவர் வீசிய 18-வது ஓவரில் 3 விக்கெட்கள் (டேவிட் மில்லர், சாஹா, அக் ஷர் படேல்) வீழ்த்தியதே பஞ்சாப் அணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தியது. முக்கிய விக்கெட்கள் வீழ்ந்ததால் கடைசி இரு ஓவர்கள் பஞ்சாப் அணி 14 ரன்கள் மட்டுமே எடுத்தது.

171 ரன்கள் இலக்குடன் பேட்செய்த கொல்கத்தா 16.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

காம்பீருடன் தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரேன் 18 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். காம்பீர் 49 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ராபின் உத்தப்பா 26, மணீஷ் பாண்டே 25 ரன்கள் சேர்த்தனர்.

கொல்கத்தா அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 3 ஆட்டத்தில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு தோல்வி கண்டிருந்தது. அதேவேளையில் இரு வெற்றிகளை பெற்ற பஞ்சாப் அணி முதல் தோல்வியை சந்தித்தது.

வெற்றி குறித்து கொல்கத்தா கேப்டன் காம்பீர் கூறும்போது, “ஆடுகளம் பேட் செய்வதற்கு ஏற்றதாக இருந்தது. ஏற்கெனவே அணியில் தரம்வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இருக்கும் நிலையில் உமேஷ் யாதவ் அணிக்கு திரும்பியது எங்களது பணியை மிகவும் எளிதாக்கியது. சுனில் நரேன் பேட்டிங் மீது தற்போது நம்பிக்கை கொள்ளும் நேரமிது.

சிறந்த சுழற்பந்து வீச்சாளரான அவர் சூழ்நிலைக்கு தகுந்தபடி பேட்டிங்கில் அதிரடியாக விளையாடும் திறனையும் பெற்றுள்ளார். நரேன் பந்துகளை நன்கு ஹிட் செய்கிறார். எங்களது பேட்டிங் வரிசை வலுவாக இருந்ததால் அவரை தொடக்க வீரராக களமிறக்கினோம்’’ என்றார்.

தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் கூறும்போது, “பந்துகள் நன்கு ஸ்விங் ஆனதால் 170 ரன்கள் போதுமானது என்றே நினைத்தேன். ஆனால் அவர்களது தொடக்கம் சிறப்பானதாக இருந்தது. சுனில் நரேன் தொடக்க வீரராக களமிறங்கியதில் எனக்கு எந்தவித ஆச்சர்யமும் இல்லை. இதை அவர் பிக்பாஷ் தொடரில் செய்துள்ளார். பேட்டிங்கின் போது நாங்கள் ஒரே ஓவரில் 3 விக்கெட்களை இழந்தது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in