

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 8-வது சுற்றும் டிராவில் முடிந்துள்ளதால், நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
நடப்பு சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 12 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியின் 8-வது சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஏற்கெனவே இரண்டு சுற்றுகளில் வென்றுவிட்ட கார்ல்சன், தற்காப்பு ஆட்டத்தை குறிக்கோளாகக் கொண்டே இந்த சுற்றில் விளையாடினார். ஆனந்துக்குப் பிடித்த ரய் லோபஸ் முறையில் விளையாட்டை ஆரம்பித்த கார்ல்சன், தனது ராஜாவுக்கு முன்னால் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தினார். தொடர்ந்து, ஆனந்தும் தனது ராஜாவுக்கு முன்னால் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தினார்.
நான்காவது நகர்த்தலில் இருந்து இருவரும் சிப்பாய், குதிரை ,பிஷப் ஆகியவற்றை மாறி மாறி வெட்டிக்கொண்டனர். 22- வது நகர்த்தலின்போது இருவருமே சமபலத்துடன் இருந்தனர். அடுத்தடுத்த சில நகர்த்தல்களில் இருவரும் ராணிக்கு ராணி, யானைக்கு யானை, குதிரைக்கு குதிரை என வெட்டி ஆடினர். இதனால் 28-வது நகர்த்தலுக்குப் பிறகு இருவரிடமும் ராஜா மற்றும் 7 சிப்பாய்கள் மட்டுமே இருந்தன. 33-வது நகர்த்தலில் இருவரும் பரஸ்பரம் டிரா செய்ய ஒப்புக்கொண்டனர். இதனால் 8-வது சுற்று 75 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
இந்த டிராவினால் கார்ல்சன் வெற்றி வாய்ப்பினை நெருங்கியுள்ளார். அடுத்த 3 சுற்றுகளையும் அவர் டிரா செய்தாலே, சாம்பியன் பட்டம் நிச்சயம். ஆனால், ஆனந்த் மேலும் பின்னடைவை சந்தித்துள்ளார். இன்னும் 4 சுற்றுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் கார்ல்சன் 5 புள்ளிகளுடனும், ஆனந்த் 3 புள்ளிகளுடனும் உள்ளனர். அடுத்து வரும் சுற்றுகளில் ஆனந்த் வெற்றி கண்டால் மட்டுமே உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
புதன்கிழமை ஓய்வு நாள் என்பதால், வியாழக்கிழமை 9-வது சுற்று நடைபெறுகிறது. அந்த சுற்றில் வெள்ளைக் காயுடன் விளையாடும் ஆனந்த், பின்னடைவில் இருந்து மீள, கடுமையாகப் போராடி, வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது .