சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் தவறிழைத்ததாக முத்கல் கமிட்டி அறிக்கை: விவரங்களை வெளியிட உத்தரவு

சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் தவறிழைத்ததாக முத்கல் கமிட்டி அறிக்கை: விவரங்களை வெளியிட உத்தரவு
Updated on
2 min read

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய முகுல் முத்கல் கமிட்டி, ஐசிசி தலைவர் என்.சீனிவாசன், அவருடைய மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா, ஐபிஎல் தலைமை செயல் அதிகாரி சுந்தர்ராமன் ஆகியோர் தவறிழைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.

இவர்கள் தவிர 3 கிரிக்கெட் வீரர்களும் தவறிழைத்திருப்பதாகக் கூறியுள்ள நீதிமன்றம், அவர்களின் பெயரை தற்போதைய நிலையில் வெளியிடக்கூடாது என தெரிவித்துள்ளது. சீனிவாசன் உள்ளிட்ட 4 பேருக்கும் முத்கல் கமிட்டி அறிக்கையின் சம்பந்தப்பட்ட பகுதியை அனுப்பவேண்டும். அது கிடைக்கப் பெற்றதிலிருந்து அடுத்த 4 நாட்களுக்குள் அவர்கள் தங்களின் ஆட்சேபத்தை தெரிவிக்கலாம் எனவும் நீதிமன்றம் பணித்துள்ளது.

2013 ஐபிஎல் தொடரின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம் விஸ்வரூபமெடுத்ததைத் தொடர்ந்து அது தொடர்பாக விசாரணை நடத்த பிசிசிஐ சார்பில் இரு நபர் குழு அமைக்கப்பட்டது. அதை எதிர்த்து பிஹார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்ய வர்மா மும்பை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், விசாரணைக் குழுவை சட்டத்துக்கு புறம்பானது என அறிவித்தது.

இதையடுத்து இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. அதை விசாரித்த நீதிமன்றம், ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்த முத்கல் கமிட்டியை அமைத்தது. விசாரணை நடத்திய முத்கல் கமிட்டி பின்னர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்குர், எஃப்.எம்.கலிஃபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, முத்கல் கமிட்டி அறிக்கையில் உள்ள விவரங்கள் மூலம் சிலர் தவறிழைத்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது எனக் கூறிய நீதிபதிகள், அவர்கள் என்ன தவறிழைத்தார்கள் என்ற விவரங்களை வெளியிடவில்லை.

அப்போது மேலும் 3 வீரர்கள் பெயர்களையும் நீதிபதிகள் வெளியிட்டனர். ஆனால் பின்னர் அவர்கள் 3 பேரும் கிரிக்கெட் வீரர்கள் என்பதை உணர்ந்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட 3 வீரர்களின் பெயர்களும் தற்போதைய நிலையில் வெளியில் வரக்கூடாது என உத்தரவிட்டனர்.

பின்னர் விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். முத்கல் கமிட்டியின் அறிக்கை நகல்களை பிசிசிஐ, சீனிவாசன், பிகார் கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்கு அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையின்போது சம்பந்தப்பட்ட 4 பேரும் தங்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தின் முன்வைக்கலாம் எனக்கூறினர்.

பிசிசிஐ பொதுக்குழு ஒத்திவைப்பு

முன்னதாக வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் மேலும் ஒரு மாதத்துக்கு பிசிசிஐ பொதுக்குழுவை தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதிகள், முத்கல் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்த விசாரணை முடிவுக்கு வரும் வரையில் பிசிசிஐ பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in