

உலக செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்தை மீண்டும் தோற்கடித்து இரண்டாவது முறையாக உலக சாம்பியன் ஆகியிருக்கிறார் கார்ல்சன். அவருடைய அசத்தலான வெற்றி மற்றும் போட்டியின் தன்மை குறித்து பிரபல செஸ் கிராண்ட்மாஸ்டர்கள், “செஸ்24 மற்றும் ஸ்பீகில் ஆன்லைன்” இணையதளங்களுக்கு அளித்த பேட்டியின் தொகுப்பு:
காஸ்பரோவ் (முன்னாள் உலக சாம்பியன், சூச்சி போட்டியில் கார்ல்சனுக்கு உதவியவர்)
உலக செஸ் போட்டியில் மீண்டும் அதே வீரருடன் விளையாடி பட்டத்தைத் தக்கவைப்பது எளிதல்ல. சூச்சியில் கார்ல்சன் தன் திறமைக்கு ஏற்றாற்போல ஆடவில்லை. ஆனால் ஆனந்த் இந்தமுறை நன்றாக ஆடினார். போட்டி ஆரம்பிக்கும் முன்பே கார்ல்சன் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறினேன். ஏனெனில் கார்ல்சன் சிறந்த வீரர். கனவுகள் கொண்ட இளமையான கார்ல்சன் உலக சாம்பியன் ஆகியிருப்பது செஸ் விளையாட்டுக்கு நல்ல விளம்பரம் தரக்கூடியது.
ஹிகாரு நகமுரா (அமெரிக்கா)
கார்ல்சன் உலக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்வார் என்பது முதலிலேயே தெரிந்ததுதான். ஆனால் அவருடைய ஆட்டத்தின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. அதேநேரத்தில் ஆனந்த் நன்றாக விளையாடினார். கார்ல்சன் 6-வது சுற்றில் தவறு செய்து வென்றது இயல்புக்கு மாறானது. பின்னடைவிலிருந்து மீண்டு வந்தார். அவர் கடந்த உலக செஸ் போட்டியில் ஆடியதுதான் ஊக்கமளிப்பதாக இருந்தது. அடுத்த தடவை கார்ல்சனுடன் வேறொரு போட்டியாளர் ஆடவேண்டும் என்றுதான் அனைவரும் எண்ணுகிறார்கள்.
லெவோன் ஆரோனியன் (ஆர்மேனியா)
ஆனந்த் இந்தமுறை நன்கு தயாராகி வந்தார். இருந்தாலும் அவருக்கு கார்ல்சனுடன் விளையாடுவது கடினமாக உள்ளது. கார்ல்சன் வேறொரு தலைமுறையைச் சேர்ந்தவர். செஸ் அடுத்தக் கட்டத்துக்கு நகர்கிறது. மைக்கேல் ஜோர்டன் இன்றைய வீரர்களுடன் விளையாடினால் அவரால் மிகச்சிறந்த வீரர் ஆக முடியாது. இந்த தலைமுறை வீரர்களுடன் ஆனந்த் மோசமாக ஆடி வருவதை வரலாறு வெளிப்படுத்துகிறது. வழக்கமாக உலக செஸ் போட்டிகளில் ஆட்டங்களின் தரம் நன்றாக இருக்காது. ஆனால் இந்தப் போட்டியில் தரம் இருந்தது.
செர்ஜி கர்ஜாகின் (ரஷ்யா)
ஆனந்தின் பிரச்னை, நல்ல நிலைமைக்கு வந்து தவறவிடுவது. போட்டியின் கடைசி இரு சுற்றுகளில் கார்ல்சன் அல்லாத வேறு ஒருவருடன் ஆடியிருந்தால் ஆனந்த் நிச்சயம் அரைப் புள்ளிக்குப் பதிலாக ஒன்றரைப் புள்ளிகள் எடுத்திருப்பார். 11-வது சுற்றில் கண்டது மோசமான தோல்வி. இது ஆனந்தின் செஸ் பலத்தைப் பிரதிபலிக்கவில்லை.
பென் ஃபின்கோல்ட் (அமெரிக்கா)
பலர் நான் சொல்வதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனந்த் இந்தப் போட்டியை வெல்வார் என்று நினைத்தேன். அவர் நன்றாக விளையாடினாலும் நிறைய தவறுகள் செய்தார். 2-வது சுற்றில் 34…h5 மற்றும் 11வது சுற்றில் 27…Rb4 போன்ற தவறுகள் எல்லாம் எனக்குப் புரியவில்லை. ஆனந்த் எப்போதாவது ஒரு தவறு செய்து மொத்தத்தையும் பாழாக்கிவிடுகிறார். ஆனந்த்-கார்ல்சன் ஆடும் அடுத்த உலக செஸ் போட்டி இன்னும் நன்றாக இருக்கும்! ஆமாம். கார்ல்சனுக்கு மீண்டும் ஆனந்த் சவால் விடுக்கப்போகிறார்.