

பின்னடைவுச் சூழலில் இருந்து தனது சாதுர்யமான நகர்த்தல்களால் மீண்ட ஆனந்த், கார்ல்சன் உடனான 4-வது சுற்று ஆட்டத்தை டிரா செய்தார்.
நடப்புச் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் இடையிலான 4-வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது.
6 மணி நேரத்துக்கும் மேலாக மராத்தானாக நீடித்த இந்த ஆட்டம், 64-வது நகர்த்தலில் டிரா ஆனது. இதனால், இருவரும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 4-வது சுற்றில், வெள்ளைக்காயுடன் விளையாடிய ஆனந்த், தனது ராஜாவுக்கு முன்னால் இருந்த சிப்பாயை நகர்த்தி ஆட்டத்தை ஆரம்பித்தார்.
கார்ல்சனும் தனது ராஜாவுக்கு முன்னால் இருந்த சிப்பாயை நகர்த்தினார். 8-வது நகர்த்தலில் ஆனந்த் தனது ராணியால் கார்ல்சனின் ராணியை வெட்டினார். அதைத் தொடர்ந்து, கார்ல்சன் தனது ராஜாவால் ஆனந்தின் ராணியை வீழ்த்தி பதிலடி கொடுத்தார்.
இடையில், கார்ல்சனின் நகர்த்தலில் ஆனந்துக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும் சூழல் எழுந்தது. ஆனால், தனது சாதுர்யமான நகர்த்தல்களால் அதில் இருந்து மீண்டார் ஆனந்த்.
நேற்றைய ஆட்டத்தில் கார்ல்சனை திக்குமுக்காடச் செய்தார் ஆனந்த். அதற்குப் பதில் தரும் வகையிலேயே இன்றைய ஆட்டத்தை அமைத்தார் கார்ல்சன்.
இறுதியில் 64-வது நகர்த்துதலோடு இருவரும் போட்டியை டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டனர். இந்தப் போட்டி சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
மொத்தம் 12 சுற்றுகளில் இப்போது 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இரு வீரர்களும் தலா 2 புள்ளிகளுடன் உள்ளனர். நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நடைபெறும் 5-வது சுற்றில் ஆனந்த் கறுப்புக் காயுடன் விளையாடுகிறார்.