

கடவுளுடன் செஸ் விளையாடி னால் கூட தவறுகள் செய்தால் எதிர்த்து விளையாடுபவர் தப்பிவிட முடியும். ஆனால் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக செஸ் விளையாடும்போது சிறிய தவறு செய்தால் எதிராளியை அவர் தூக்கி சாப்பிட்டு விடுவார் என்பதை சமீபத்தில் சென்னையில் முடிவடைந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பார்க்க முடிந்தது.
கார்ல்சனை எதிர்த்து விளையாடிய விஸ்வநாதன் ஆனந்த்தான் அதனை சரியாக புரிந்துகொண்ட முதல் மற்றும் கடைசி நபராக இருக்க வேண்டும்.
செஸ் போட்டியில் எவ்வளவு பெரிய கில்லாடியாக இருந்தாலும், அவர்களின் அனைத்து காய் நகர்த்தல்களும் மிகச்சரியானதாக இருக்கும் என்று கூற முடியாது. எதிராளி செய்யும் சிறு தவறுகளைக் கூட நமக்கு சாதமாக திருப்பத் தெரிந்த கலையைக் கற்றுத் தேர்ந்ததால்தான் கார்ல்சன் சாம்பியனாக முடிந்திருக்கிறது.
ஆனந்த் இருமுறை சிறு தவறு செய்தார். அதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. மேலும் இருமுறை தவறு செய்தார். கார்ல்சன் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டார். இப்போட்டியில் ஒரேஒரு முறை ஆனந்த் வெற்றிபெற்றிருந்தால் கூட ஆட்டத்தின் போக்கை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் கார்ல்சன் அதற்கு இடம் கொடுக்கவேயில்லை.
விளையாட்டில் தொடக்கத்தில் செய்யும் சிறு தவறுகளை திருத்திக் கொள்ளும் திறமைசாலிகள் நிச்சயமாக வெற்றிபெறுவார்கள். ஆனால் கார்ல்சனுக்கு எதிராக தவறு செய்தால், எவரும் தப்ப முடியாது.
செஸ் காய்களை நகர்த்துவதில் அவர்தான் முதலாவது மிகச்சிறந்த மேதை என்று கூற முடியாது. சென்னை போட்டியில் கார்ல்சனை எதிர்த்து விளையாடிய ஆனந்தும் மேதைதான். இவர்களுக்கு முன்பே பாபி பிஷரும் உள்ளார். இந்தப் பட்டியலில் ஜோஸ் ரௌல், காபாபிளாக்கா பால் மர்பி ஆகியோரும் உள்ளனர்.
ஆனால் இவர்கள் எல்லாரையும் விட கார்ல்சன் மிகவும் வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர். எதிராளியை வீழ்த்தும் பரிசை அளிப்பதில் அதிகபட்ச திறமையை ஆரம்பத்திலிருந்தே உபயோகிப்பவர் இவர்தான். இவருக்கு நிகராக எவரும் இதுவரை உருவாகவில்லை.
செஸ் விளையாட்டு என்பது பெரும்பாலான சூழ்நிலைகளில் டிராவில் முடிவதாகவே அமையும். பெரும்பாலான கிராண்ட்மாஸ்டர்கள் பெருமளவிலான ஆட்டங்களை டிராவில் முடித்துக் கொள்வதை மகிழ்ச்சியுடன் ஏற்பார்கள். அப்போதுதான் அடுத்த சுற்று ஆட்டத்தை புத்துணர்ச்சியுடன் விளையாட முடியும். அதற்கான ஊக்கமும் இருக்கும். டிரா செய்து கொள்ளலாம் என்று ஒருவர் கூறினால் எதிர்முனையில் இருப்பவரும் அதனை விருப்பத்துடனேயே ஏற்பார்கள். ஆனால் அது கார்ல்சனிடம் மட்டும் நடக்காது. டிரா செய்து கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்தால் அதனை கார்ல்சன் ஏற்பதில்லை. அவராக நினைத்தால் மட்டுமே ஆட்டத்தை டிரா செய்ய வாய்ப்பு அளிப்பார். இது அவரது வலிமை.
பங்கேற்கும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற வேண்டும் என்பதே அவரது குறிக்கோள் என்பது நன்கு தெரிகிறது. இதே வழியைப் பின்பற்றித்தான் அவர் 19 வயதில் உலகின் நம்பர் 1 வீரர் ஆனார். இப்போது 22 வயதில் உலக சாம்பியனாகியும் விட்டார்.
பாபி பிஷர் காலத்தில் இருந்தே செஸ் ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்கு ஒன்று புரியும். கார்ல்சனின் அணுகுமுறை வித்தியாசமானது என்பதுதான் அது. சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற தீவிரம் ஆரம்பம் முதலே அவரிடம் காணப்படும். இது அவரது ஆட்டத்திறனிலும் அவரது அணுகுமுறையிலும் பளிச்சிடும்.
சர்வதேச அளவில் செஸ் விளையாட்டுக்கு மிகப்பெரிய ஊக்கமளிப்பவராகவும், கவனத்தை ஈர்க்கும் மையமாகவும் கார்ல்சன் மாறியுள்ளார். இதனால் மேலும் பலர் செஸ் விளையாட்டால் கவரப்படுவார்கள். அது இந்த விளையாட்டுத் துறைக்கு நல்லது.
கவர்ச்சிகரமான ஆண்மகன் என்று காஸ்மோபோலிட்டன் பத்திரிகையால் கார்ல்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சர்வதேச பிராண்டுகளுக்கு மாடலாகவும் உள்ளார். சென்னையில் இருந்து அவர் தொடங்கிய வெற்றியை உலகமே பின்தொடர்ந்து வருகிறது. ஆனந்த், கேரி கேஸ்பரோவ் ஆகியோரைப் போன்ற தொடக்கம் இவருக்கு அமையாவிட்டாலும் அவர்களது இடத்தை இவர் பிடிப்பதற்கான காலம் உள்ளது.