

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 23-வது ஒலிம்பிக் போட்டி 1984-ம் ஆண்டு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற்றது. 140 நாடுகளைச் சேர்ந்த 1,566 வீராங்கனைகள் உட்பட மொத்தம் 6,829 பேர் கலந்து கொண்டனர். 21 விளையாட்டுகளில் 221 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
போட்டியை நடத்திய அமெரிக்கா 83 தங்கம் உட்பட 174 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. ருமே னியா 20 தங்கம் உட்பட 53 பதக்கங் களை வென்று 2-வது இடத்தையும், மேற்கு ஜெர்மனி 17 தங்கம் உட்பட 59 பதக்கங்களை வென்று 3-வது இடத்தையும் பிடித்தன.
மொராக்கோ வீராங்கனை நவால் இல் மவுதாவாகெல் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது இதுவே முதல்முறை. போர்ச்சுக்கல் வீரர் கார்லோஸ் லோப்ஸ் மாரத்தான் ஓட்டத்தில் சாதனை படைத்தார். 2 மணி, 9 நிமிடம், 21 விநாடிகளில் அவர் பந்தய தூரத்தைக் கடந்தார். இந்த சாதனை 24 ஆண்டுகளுக்குப் பின்னர் முறியடிக்கப்பட்டது.
பி.டி.உஷா ஏமாற்றம்
இந்தியாவால் ஒரு பதக்கம்கூட வெல்ல முடியவில்லை. 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் பி.டி. உஷா இறுதிச்சுற்று வரை முன்னேறினார். நூலிழையில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த அவர், 4-வது இடத்தைப் பிடித்தார். ஒலிம்பிக் தடகளத்தில் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பி.டி.உஷாவுக்கு கிடைத்தது.