

மன அழுத்தம் காரணமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோனத்தான் டிராட் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி நாடு திரும்புவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 381 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி வீரர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் முன்னணி பேட்ஸ்மேன் டிராட் விலகியுள்ளது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் டிராட் முறையே 10 மற்றும் 9 ரன்களே எடுத்தார். இருமுறையும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனிடமே விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் அவுட் ஆன விதம் குறித்து ஆஸ்திரேலிய வீரர் வார்னர் கேலியாக விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பதிலடிகொடுத்த இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், இது ஒரு நல்ல விளையாட்டு வீரருக்கான பேச்சு அல்ல என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக டிராட் நாடு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் இருந்து தாற்காலிகமாக ஒய்வு எடுத்துக் கொண்டு, மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்கே இப்போது முக்கியத்துவம் கொடுத்துள்ளேன் என்று டிராட் கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் இங்கிலாந்து அணி இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோல்வியடையவில்லை என்ற பெருமையுடன் ஆஷஸ் தொடரில் பங்கேற்க வந்தது. ஆஸ்திரேலிய அணி கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெறாமல் இருந்தது.