

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் மற்றும் சூதாட்டக் குற்றச்சாட்டு தொடர்பாக பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசன் அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் ஆகியோர் நீதிபதி முத்கல் குழு முன்பு சென்னையில் வியாழக்கிழமை ஆஜராகினர்.
ஐபிஎல் சூதாட்ட புகார் தொடர்பாக மெய்யப்பன் மீது மும்பை போலீஸார் குற்ற வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி முத்கல் தலைமையிலான 3 நபர் குழு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், ஐபிஎல் தலைமைச் செயலாளர் சுந்தர் ராமன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தியுள்ளது. பிசிசிஐ மற்றும் ஐபிஎல்-லில் உயர் பொறுப்புகளில் உள்ள மேலும் சிலரிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவாண், சித்தார் திரிவேதி ஆகியோரிடம் இக்குழு ஏற்கெனவே விசாரணை நடத்திவிட்டது. மெய்ப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்கள் மீதான சூதாட்டப் புகார் தொடர்பாகவே இக்குழு முக்கியமாக விசாரணை நடத்துகிறது.
ஸ்ரீசாந்த், அங்கீத் சவாண் ஆகியோருக்கு பிசிசிஐ ஏற்கனவே கிரிக்கெட்டில் இருந்து ஆயுள் கால தடைவிதித்துள்ளது. திரிவேதிக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.