

தோனி கேப்டன்சியில் பல போட்டிகளில் ஆடியுள்ள சுரேஷ் ரெய்னா, அவரை கேப்டன்சியிலிருந்து நீக்கியது பெரிய ஏமாற்றமளிக்கிறது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “தோனி இந்திய அணியையும் ஐபிஎல் போட்டிகளிலும் நன்றாக தலைமை ஏற்று நடத்தியவர், அவரை மதிக்க வேண்டும். இதை நான் மட்டும் கூறவில்லை உலகமே அப்படித்தான் கூறுகிறது”
நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி 5 போட்டிகளில் 67 ரன்களை மட்டுமே எடுத்துள்ளதால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ரெய்னா மேலும் கூறும்போது, “அவருடன் ஓய்வறையை பகிர்ந்து கொண்டவன் என்ற முறையில் கடினமான காலக்கட்டங்களில் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும். அவரை ஒரு வீரராக மதிக்க வேண்டும். எந்தத் தொழிலாக இருந்தாலும் வீரர் அல்லது பத்திரிகையாளர் ஆகியோரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வீரர் எவ்வளவு ஃபார்ம் அவுட்டாக இருந்தாலும் தனக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்களே.
ஆனால் இவையெல்லாம் அவரைப் பாதிக்காது, அவர் மீண்டும் ரன்கள் வழிக்குத் திரும்புவார், 2-3 ஆட்டங்களுக்குப் பிறகு அவர் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கிறேன். அவர் முன்னால் களமிறங்க வேண்டும் நீண்ட நேரம் ஆட வேண்டும், அவர் உலகத்தரம் வாய்ந்த பினிஷர் என்பது நினைவிருக்கட்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடிய அனுபவம் சிறப்பு வாய்ந்தது. நாங்கள் நிறைய கோப்பைகளை வென்றோம், ஐபிஎல் ஆக இருக்கட்டும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடராகட்டும் நிறைய வெற்றிகளை குவித்தோம். என்னுடைய சிறுவயதில் அனைத்து உலக லெஜண்ட்களுடன் ஓய்வறையை பகிர்ந்து கொண்டது பெரிய அளவில் எனக்கு உதவி புரிந்துள்ளது.
கோலி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துகிறார், அவரது தீவிரமும், ஆட்டம் மீதான உணர்வும் சாம்பியன்ஸ் டிராபியை தக்க வைப்பார் என்று நம்புகிறேன். உணர்வுகளை ஆக்ரோஷமாக ஒரு பாதையில் ஒருங்கிணைக்க அவருக்குத் தெரியும்.
அனைவரும் அவருக்கு ஆதரவு அளிக்கின்றனர், வீரர்களும் அவரைப்போல இருக்க விரும்புகின்றனர். அவர் ரன்கள் எடுக்க ஆரம்பித்தால் எந்த அணியும் இந்தியாவை சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதை தடுக்க முடியாது. டெஸ்ட், ஒருநாள் இரண்டிலும் அசத்துகிறார், இனி 2013-ல் இங்கிலாந்தில் தோனி என்ன செய்தாரோ அதனை இம்முறை அவர் சாம்பியன்ஸ் டிராபியில் செய்ய வேண்டும்” என்றார் ரெய்னா.