

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வி அடைந்த விதம் ‘போராட்டமற்ற சரண்’ என்று வர்ணித்த ஷாகித் அஃப்ரீடி அணி தோல்வி அடைந்தது வேதனையளிக்கிறது என்று கூறியுள்ளார்.
ஐசிசிக்காக எழுதிய பத்தியில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியா-பாகிஸ்தான் போட்டி மீது எழுப்பப்பட்ட எதிர்பார்ப்புகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. மறக்கக்கூடிய ஒரு ஆட்டத்தை பாகிஸ்தான் ஆடியது. ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் ஆதரவாளராக படுமோசமாக ஆடியதைப் பார்க்கும் போது வேதனை ஏற்பட்டது.
வெற்றி பெறும் அணி என்று கணிக்கப்பட்ட இந்தியா, ஆரம்பத்திலிருந்தே அதற்குரிய தன்மையுடன் ஆதிக்கம் செலுத்தியது, பாகிஸ்தான் அணியோ நொடிந்து விழுந்தது.
டாஸ் வென்ற சர்பராஸ் அகமது மழை வரும் என்ற எதிர்ப்பாப்புக்கு இணங்க 2-வதாக பேட் செய்ய முடிவெடுத்தார், ஆனால் மோசமான திட்டமிடுதல் அதைவிடவும் மோசமான செயல்படுத்தல், தவிரவும் படுமோசமான பீல்டிங் ஆகியவை 2-வதாக பேட் செய்யக்கூடிய அனுகூலங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கியது.
மொகமது ஆமீர் அருமையான முதல் ஓவரை வீசினார். அவர் புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்றே எதிர்பார்த்தேன். ஆனால் விசித்திரமாக புதிய பந்தை அவர் ஸ்பின்னர் இமாத் வாசிமிடம் அளித்தார். மேகமூட்டமான சூழலில் ஸ்பின்னரை தொடங்கச் சொன்னது புதிராக இருந்தது. ஏனெனில் மேட்ச் என்ன அரபுநாட்டிலா நடந்தது? இந்தியாவுக்கு ஆச்சரிமளிக்க வேண்டும் என்று சர்பராஸ் நினைத்திருந்தாலும் ஓரிரு ஓவர்களுக்குப் பிறகு வேகப்பந்து வீச்சை கொண்டு வந்திருக்க வேண்டும்.
ரோஹித் சர்மா, ஷிகர் தவண் போன்ற திறமையான வீரர்களை நிலைபெற அனுமதித்தால் அதன் பிறகு அவர்களை நிறுத்துவது கடினம். இதைத்தான் பாகிஸ்தான் நேற்று அனுமதித்தது.
களைப்படைந்த பாகிஸ்தான் பந்து வீச்சை பிறகு விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் காட்டடி அடித்தனர். பிறகு ஹர்திக் பாண்டியா.
பாகிஸ்தான் பீல்டிங் மிகவ்ம் மோசம். 30 அடி வட்டத்துக்குள்ளேயே நிறைய சிங்கிள்களை விட்டுக் கொடுத்தார். அதோடு கோட்டை விட்ட கேட்ச்களும் இணைந்தது. பதற்றம் இல்லை என்று போட்டிக்கு முன்பு பாகிஸ்தான் கூறினாலும் வீரர்கள் பதற்றம் வெளிப்படை.
பேட்ஸ்மென்களுக்குத் திறமை போதவில்லை. மட்டைக்கு சாதகமான பிட்சில் 164 ரன்கள் என்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. காரணம் இந்திய அணி சர்வ சாதாரணமாக 319 ரன்களை அடித்ததே, ஏன் இவர்களால் முடியவில்லை? காரணம் திறமை போதவில்லை.
இவ்வாறு சாடியுள்ளார் ஷாகித் அஃப்ரீடி.