

ஒலிம்பிக் போட்டியில், பெண்கள் பிரிவு ஜிம்னாஸ்டிக்கில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற திபா கர்மாகர், 4-வது இடம் பிடித்து பதக்கத்தை தவற விட்டார். மேலும் ஜிம்னாஸ்டிக் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் திபா கர்மாகருக்கு கிடைத்தது. இந்நிலையில், அவரது பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், துப்பாக்கி சுடும் வீரர் ஜித்து ராய் பெயரும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு தினத்தன்று ஜனாதிபதி இந்த விருதினை வழங்க உள்ளார். இந்த விருது குறித்து மத்திய அரசு இன்று இறுதி முடிவெடுக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ரஹானே பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஹாக்கி வீரர் ரகுநாத், குத்துச்சண்டை வீரர் ஷிவா தபா, தடகள வீராங்கனை லலிதா பாபர் ஆகியோரது பெயரும் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
**********
பளு தூக்குதலில் ஜார்ஜியா வீரர் சாதனை
ஆடவருக்கான பளு தூக்கும் போட்டியின் 105 கிலோ உடல் எடை பிரிவில் ஜார்ஜியா வீரர் பெஹ்தாத் சலிம் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.
22 வயதான அவர் ஸ்னாட்ச் பிரிவில் 215 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 258 கிலோ என மொத்தம் 473 கிலோ தூக்கி சாதனை புரிந்தார். அர்மேனிய வீரர் மின் சயான் 451 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கமும், மற்றொரு ஜார்ஜியா வீரர் துர்மென்தஷ் 448 கிலோ தூக்கி வெண்கலமும் வென்றனர்.