Published : 30 Jun 2017 08:34 PM
Last Updated : 30 Jun 2017 08:34 PM

கோலிக்கு வந்த ஷார்ட் பிட்ச் பவுலிங் சோதனை: திணறலுக்குப் பிறகு ஆட்டமிழந்தார்

மே.இ.தீவுகளுக்கு எதிராக மாற்றமில்லாத அணியுடன் இந்திய அணி 3-வது ஒருநாள் போட்டியில் களமிறங்கி ஆடி வருகிறது. மே.இ.தீவுகளால் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி மந்தமான முறையில் பேட் செய்து வருகிறது.

பிட்சில் கொஞ்சம் பவுன்ஸ் கூடுதலாக இருந்து வருகிறது. முதலில் ஷிகர் தவன் கமின்ஸ் வீசிய பவுன்சரை அப்பர் கட் செய்து தேர்ட் மேனில் சேஸிடம் கேட்ச் கொடுத்து விரைவில் வெளியேற, கோலி களமிறங்கினார்.

மொத்தம் 22 பந்துகளைச் சந்தித்த கோலி, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே மார்புயர ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுச் சோதனைகளுக்கு ஆளானார். இதில் அவரது ஆட்டம் திக்கித் திணறியதாக அமைந்தது. 2-வது பந்தே அதிக உயரம் எழும்பி கோலியை பிரச்சினைக்குள்ளாக்கியது.

ஆஃப் ஸ்டம்ப் பந்தில் எப்படியாவது விராட் கோலி மட்டையை நீட்டுவார் என்று மே.இ.தீவுகள் கேப்டன் ஹோல்டர் எதிர்பார்த்தார், அதற்கேற்ப பீல்டிங்கை அமைத்தார். ஓரிரு மிஸ்டைம்டு ஷாட்களையும் கோலி ஆடினார். ஷார்ட் பிட்ச் பந்து வீச்சு சோதனையினால் ஓவர் பிட்ச் பந்தை பிளிக் செய்வதில் கூட கோலிக்கு டைமிங் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஹோல்டர் வீசிய இன்னிங்சின் 8-வது ஓவரில் 4-வது பந்து கோலிக்கு சற்று வேகமாக வந்தது, எழும்பியது தடுத்தாட முனைந்து பீட் ஆனார்.

அடுத்த பந்து ஆஃப் ஸ்டம்புக்குச் சற்று வெளியே குத்தி எழுப்பினார் ஹோல்டர், எந்த ஒரு புரிதலுமில்லாமல் தடுத்தாடினார் கோலி பந்து மட்டையின் மேல் விளிம்பில் பட்டு பேக்வர்ட் பாயிண்டில் கேட்சாகச் சென்றது, ஆனால் அங்கு ஹோப் பந்தை தவறாகக் கணித்து முன்னால் ஓடி வந்து பிறகு பின்னால் டைவ் அடித்து கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டார்.

மீண்டும் அடுத்த ஓவரில் கமின்ஸ் வீசிய பவுன்சரை ஹூக் செய்ய முயன்று முழுதாக பீட் ஆனார். இதனால் சற்று எரிச்சலடைந்தார் கோலி.

இப்படியே போய்க்கொண்டிருந்த இன்னிங்ஸில் ஹோல்டர் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே குத்தி எழுப்பினார், நெஞ்சுயரம் வந்த பந்துக்கு ஏற்கெனவே முன்னங்காலை சற்றே முன்னெடுத்து கமிட் ஆன நிலையில் கோலி பந்தை அடிக்காமல் மட்டையால் இடித்தார் இம்முறை கல்லியில் கேட்ச் பிடித்தார் ஷாய் ஹோப்.

கோலியின் வேதனையான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 11 ரன்களில் வெளியேறினார். ரஹானே 32 ரன்களுடனும், யுவராஜ் 8 ரன்களுடனும் ஆடி வருகின்றனர், இந்தியா 16 ஓவர்களில் ஓவருக்கு 4 ரன்கள் கூட இல்லாமல் 55/2 என்று ஆடி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x