

தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்தும் அணிக்குள் தான் மீண்டும் நுழைந்துள்ளதாலும் பழைய ‘அச்சமற்ற அதிரடி’ யுவராஜ் மற்றும் தோனியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ.டிவிக்கு யுவராஜ் கூறியதாவது:
ஆரம்பத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து ஆடியதைப் போன்றே இருக்கும். அவருக்கு முன்னால் நான் இந்திய அணிக்குள் நுழைந்தேன் (2000, தோனி 2004) அப்போதெல்லாம் இருவரும் சேர்ந்து ஆடும்போது பயப்படாமல் அடித்து ஆடுவோம். வரும் தொடரிலும் இருவரும் அதே பாணியில் ஆடுவோம்.
தோனியின் கேப்டன்சியில் நாம் நம்பர் 1 நிலையில் இருந்தோம், 2 உலகக்கோப்பைகள் போன்றவை மிகப்பெரிய சாதனைகள். அவர் அமைதியும் நிதானமும் உடையவர்.
கேப்டன் பதவியிலிருந்து அவர் இறங்கியது நல்ல முடிவு என்றே நான் கருதுகிறேன். 2019 உலகக்கோப்பைக்கு அடுத்த கேப்டன் அணியைத் தயார் செய்ய வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். இதனை அவர் விராட்டிடம் கண்டிருக்கலாம். வீரராக அவர் இன்னமும் அதிகம் அணிக்குப் பங்களிப்பு செய்ய முடியும் என்றே நான் கருதுகிறேன், என்ற யுவராஜ், மொஹீந்தர் அமர்நாத்துக்குப் பிறகு அதிக முறை அணிக்கு மீண்டும் வந்த வீரராகத் திகழ்கிறார்.
இந்நிலையில் விராட் கோலி பற்றி அவர் கூறும் போது, “என் கண் முன்னே விராட் வளர்ந்து வந்ததை பார்த்திருக்கிறேன். எப்போதும் மென்மேலும் அவர் சிறப்பாகவே மாறிக் கொண்டிருக்கிறார். விராட்டிடம் பிடித்தது என்னவெனில் தனிச்சிறப்பான ஆட்டம் அவருக்கு அவர் நினைத்த போது கைகூடுகிறது. கரியர் முழுதுமே சீராக ஆடி வருகிறார். அவரிடம் இருக்கும் தீப்பொறி போன்ற உந்துதல் மற்றும் சீரான தன்மை அவரை ஒரு நல்ல கேப்டனாக மாற்றியுள்ளது.
இதைத்தான் எப்போதும் அணியினரிடத்திலும் அவர் எதிர்பார்க்கிறார், 100% அர்ப்பணிப்பு, இதுதான் சிறந்த கேப்டனுக்கான ஒரு தனித்த அடையாளம். ஒவ்வொரு ஆட்டத்திலும் முந்தைய ஆட்டத்தை விட அதிகமாக ஆட விரும்புகிறார். ஒவ்வொரு ஆட்டத்திலும் மேலும் வளர்ந்து கொண்டே செல்ல வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார்.
முன்பு நன்றாகத் தொடங்கி சதங்கள் அடித்து வந்தார், தற்போது இரட்டை சதங்களாக மாற்றி வருகிறார். 3 வடிவங்களிலும் 50 ரன்கள் சராசரி யார் வைத்திருக்கிறார்கள்? விராட் நிச்சயம் இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வார்” என்றார் யுவராஜ் சிங்.